

தமிழக வெற்றிக் கழகம் அறிவித்த முக்கியத் திட்டங்களில் ஒன்றான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை இன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாய்மார்கள் நெகிழ்ச்சியான தருணங்களை முதலமைச்சருடன் பகிர்ந்துகொண்டனர். குழந்தைகளுக்கு மோதிரத்தை அணிவித்து, கொஞ்சி மகிழ்ந்தார் விஜய்.
தாய்மாமன் என்ற உறவு, தமிழக உறவுமுறைகளில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமூகத்தில் உறவுமுறைகளும், அவற்றுக்கான உரிமைகளும் எல்லாம் நீர்த்துப்போகும் இந்தக் காலத்தில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ என அரசு திட்டத்துக்குப் பெயர் வைத்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
தமிழ் சமூகத்தில் தாய்மாமன் என்ற உறவுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படம் நினைவுகூரப்படுகிறது.
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் அந்தத் திரைப்படத்தில் விஜயகுமார், ராதிகா, நெப்போலியன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். விஜயகுமார் மற்றும் ராதிகா இடையிலான அண்ணன் - தங்கை உறவைப் பேசும் இந்தப் படத்தில், ஒரு குழந்தைக்கும் தாய்மாமனுக்குமான உறவு குறித்து அழுத்தமான வசனம் இடம்பெற்றுள்ளது.
“என் தங்கச்சி மக மேல இந்தத் தாய்மாமனுக்கு இருக்கிற உரிமை, பொறந்த பொறப்புல வந்த சொந்தமாப்பா. அவ பொறந்த அன்னைக்கே என் மகனுக்குத்தான்னு ஆண்டவனே எழுதிட்டான். அதை எந்தக் கொம்பனும் மாத்த முடியாது.
தாய்மாமன் முறை என்பது மாப்பிள்ளைக்கு (நெப்போலியன்) ரொம்ப கேவலமா கோவணத்துணி மாதிரி தெரியுது. அத்துவிடுங்கன்னு ஒத்த வார்த்தையில சொல்லிட்டாரு. அது அவ்வளவு லேசு இல்ல.
இந்த நாட்டுலயே இந்த ஒத்த கூட்டத்துக்குத்தான் தாய்மாமன் என்ற உரிமையும் பெருமையும் இருக்குது. இந்த நாட்டைக் காக்க சண்டைக்குப் போன பய பொண்டாட்டிய யாரை நம்பி விட்டுட்டுப் போனான்? அவன் அண்ணனை நம்பி விட்டுப் போகல, அவன் அப்பனை நம்பி விட்டுட்டுப் போகல, பொறந்த வீட்டுல அவள் அண்ணனை நம்பி விட்டுட்டுப் போனான். ஏன்? சண்டைக்குப் போனவன் திரும்பி வரலன்னா, அவளுக்கு அண்ணனாவும், அவ பெத்த பிள்ளைக்குத் தாய்மாமனாவும் கடைசி வரை இருந்து காப்பாத்துவாங்குற நம்பிக்கையிலதான்."
“தங்கச்சிக்கு ஒரு பிள்ளை பிறந்தா, முதல் சினி தண்ணி வச்சு பசியை ஆத்துறவன் தான் இந்தத் தாய்மாமன். அந்தப் பிள்ளைக்கு காது குத்துன்னா, மடியில் உக்கார வச்சு, சீர் செஞ்சி, இருக்க இடம் கொடுக்குறவன்தான் இந்தத் தாய்மாமன். அதே பிள்ளை ஆளாகும் போது, ஒதுங்கி இருக்க ஓலைக் குடிசை கட்டிக்கொடுத்து, ‘தாய்மாமன் நான் இருக்கேன், தைரியமா இரு’ன்னு சொல்றானே, அவன்தான்யா தாய்மாமன். ஒருவேளை குழந்தை ஊனமாக பிறந்தால் ஊரில் எவனும் காட்டிக்கொள்ள மாட்டான். அப்போது தன் மகனுக்கு கட்டி வைத்து கடைசி வரை காத்து தன் உயிரையேக் கொடுக்கிறவன் தான் தாய்மாமன் ” என உறவின் பெருமை குறித்துப் பேசுவார் விஜயகுமார்.
(குறிப்பு பிறந்த குழந்தைக்கு சீனி தண்ணி கொடுக்கும் பழக்கம் முற்காலத்தில் இருந்தாலும், அது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். சில நேரங்களில் அது மூளை பாதிப்பு வரை தீவிர உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்)
இந்தத் திட்டம் குறித்து செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள வீடியோவில், “தாய்மாமன்! அது வெறும் உறவன்று. எதிர்பார்ப்பில்லாத அன்பை வழங்கும் ஓர் உணர்வு. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தங்கைக்கும் துணைநிற்கும் அண்ணனாக, அவர்களின் குழந்தைகளுக்குத் தாய்மாமனாக, ‘தமிழ்நாடே என் குடும்பம்’ என்னும் உணர்வோடு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக ரூ.755.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 22 முதல் தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்தத் திட்டத்தின்படி ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
இந்தத் திட்டம் தொடரும்போது, அரசின் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
குறிப்பாக, அடுத்தடுத்த தேர்தல்களில் அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு தங்கத்தின் அளவை உயர்த்தலாம் என்கிற கவலையையும் முன்வைத்துள்ளனர்.
முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். “தங்க மோதிரம் வழங்குவதற்காகச் செலவு செய்யும் இந்த ரூ.755 கோடியைக் கொண்டு, அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப் போல் அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட ‘பிரசவ வார்டுகளை’ உருவாக்குவதுடன், தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்து தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்” என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.