நேருவின் கோட்டையைத் தகர்க்குமா அதிமுகவின் புதிய வியூகம்? முறியடிக்குமா திமுக? அதிரடி அலசல்!

திமுக 36 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது
lalgudi constituency
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தின் லால்குடி தொகுதி, பாரம்பரியமாக திமுகவின் பலம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் கே.என். நேருவின் நேரடிப் பார்வையில் இருக்கும் இந்தத் தொகுதியில், கடந்த முறை சௌந்தர பாண்டியன் வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை வேட்பாளர் மாற்றம் மற்றும் அதிமுகவின் புதிய கூட்டணி வியூகங்கள் களத்தை அதிர வைத்துள்ளன.

இந்தத் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்கள் என்று பார்க்கும்போது, 41 முதல் 60 வயதுடையவர்கள் 37 சதவீதத்தோடு முதலிடத்தில் உள்ளனர். அடுத்தபடியாக 26 முதல் 40 வயதுடையவர்கள் 30 சதவீதமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியான சமன்பாடுகளில் உடையார்கள் (பார்க்குளம்) 25 சதவீதத்தோடு பெரும்பான்மையாக உள்ளனர். முத்தரையர்கள் 18 சதவீதமும், தேவேந்திர குல வேளாளர்கள் 13 சதவீதமும், முக்குலத்தோர் 10 சதவீதமும் உள்ளனர். 77 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், விவசாயிகளின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

lalgudi constituency

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகப் பொதுமக்கள் முன்வைப்பது, கொள்ளிடம் ஆற்றில் இருந்து அளவற்ற மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லறுவடை இயந்திர வாடகை அதிகமாக இருப்பதும், விவசாயிகளுக்குத் தரமான விதைகள் மற்றும் உரங்கள் கிடைக்காததும் பெரும் புகாராக உள்ளது. போலி விதைகள் மற்றும் தரமற்ற உரங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க அரசு தவறிவிட்டதாக மக்கள் குமுறுகின்றனர். பயிர் காப்பீடு பெறுவதில் உள்ள சிக்கல்களும் லால்குடி மக்களின் நீண்ட காலக் குறையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

லால்குடி தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் முடிவுகளின் ஒப்பீட்டைப் பார்த்தால், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக இங்கு 48.9 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இது 54.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. மறுபுறம் அதிமுக 2021-ல் 39.1 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 33 சதவீதமாகச் சரிந்துள்ளது. பூத் அளவிலான தரவுகளைப் பார்க்கும்போது, 2024-ல் திமுக 120 பூத்களில் வலுவாக உள்ளது. அதிமுக 2021-ல் 93 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 81 பூத்களாகக் குறைந்துள்ளது. சுமார் 48 பூத்கள் இன்னும் எந்தப் பக்கமும் சாயாத 'ஸ்விங்' நிலையில் உள்ளன.

மிக முக்கியமாக 2026 தேர்தல் கணிப்பின்படி, லால்குடியில் திமுக 130 வாக்குச்சாவடிகளில் வலுவாகவும், 110 இடங்களில் பலவீனமாகவும் உள்ளது. அதிமுக 110 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 100 வாக்குச்சாவடிகள் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என்பதில் ஊசலாடும் நிலையில் உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் ஆய்வின்படி, 2026 தேர்தலில் அதிமுக 32 சதவீத வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக 36 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து 26 சதவீத வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 4 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பதால், கடும் போட்டி நிலவுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com