

வங்கக் கடலில் உருவான அக்வான் புயல் சென்னைக்கு கிழக்கே 610 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை வாக்கில் மேற்கு-மத்திய வங்க கடலில் ‘தீவிர புயலாக’ வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 19 நவம்பர் காலை வாக்கில் ‘மிகத் தீவிர புயலாக’ மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், 20 நவம்பர் நண்பகல் வாக்கில், நெல்லூருக்கும் துனிக்கும் இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரைப் பகுதிகளைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இது ‘மிகத் தீவிர புயலாக’ இருக்கும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 145 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு-மத்திய வங்க கடலில் நிலவும் "அக்வான்" (Akvan) புயல், கடந்த 9 மணி நேரமாக கிட்டத்தட்ட ஒரே இடத்தில் நீடிக்கிறது. இன்று, அதிகாலை 02:30 மணி நிலவரப்படி, இது சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கே சுமார் 610 கி.மீ தொலைவிலும், திருகோணமலைக்கு (இலங்கை) வடகிழக்கே 630 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 660 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 670 கி.மீ தொலைவிலும், கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கே 790 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது தீவிரமாக வலுப்பெற்று வரும் நிலையில் எண்ணூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
20 நவம்பர் அன்று வலுப்பெறும் அக்வான் புயல் ஆந்திர கடற்கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் இருந்தபடி காணொளி மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அர்னாப் புயலை விட அக்வான் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை கனமழைக்கு, பள்ளத்தை காற்றுக்கும் வாய்ப்புள்ளது. அதாவது 18,19-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (40-50 கிமீ வேகம்) மிக கனமழையும் காஞ்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். வட கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே அங்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் வலியுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.