
இந்த 2026 ஆம் ஆண்டு தேர்தல் தமிழக இதுவரை பார்க்காத புதிய தேர்தலாக அமைய உள்ளது. ஒரு பக்கம் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனும், அதிமுக பாஜகவின் கூட்டணியிலும், தவெக தன்னிச்சையாகவும் தேர்தல் காலத்தை சந்தித்து மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த மாதம் (செப் 27) கரூரில் விஜய் நடத்திய பிரச்சார கூட்டம் இவற்றை முழுவதுமாக மாற்றி அமைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக விஜய்யின் பிரச்சார கூட்டத்தின் போது அவரை சந்திக்க ஏராளமான மக்கள் கூடுவது வழக்கம் ஆனால் கரூரில் அளவுக்கு அதிகமான மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 42 பேர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசின் சார்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரச்சார கூட்டங்களுக்கு விதிமுறை வகுக்க வேண்டும் என்ற தனிநபர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தவெக -வின் தலைவர் விஜய்க்கும் கட்சியின் மற்ற நிர்வாகிகளுக்கும் தலைமை பொறுப்பு இல்லை என விமர்சித்திருந்தது. தமிழக அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்திற்கு மதுரை அமர்வில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் விசாரித்தது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் விஜய் கரூர் மக்களை சந்திக்க வரவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்த போது விஜய் வந்தார் வரவில்லை என்பது தேவையற்ற கருத்து எனவும் தெரிவித்திருந்தது. தவெக தரப்பிலிருந்து கரூர் சம்பவத்தின் போது போலீசார் அறிவுறுத்தல் காரணமாகவே விஜய் அப்பகுதியில் இருந்து சென்றார், ஆனால் அதனை ஓடி ஒளிந்து விட்டார். என விமர்சிப்பது வருத்தத்தை அளிக்கிறது என தெரிவித்தனர்.
இதற்கிடையில் கரூர் சம்பவத்தின்போது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி விஜய்க்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்திருந்தார். தவெக தலைவர் விஜய் தேசிய கட்சி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தெரிவந்தது. மேலும் கடந்த அக்டோபர் 6 -ஆம் தேதி விஜய் -உடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. அப்போது கரூர் துயரத்திற்கு ஆறுதல் தெரிவித்து இந்த விஷயத்தில் முழு ஆதரவு தர விரும்புவதாகவும் மேலும், கூட்டணி குறித்த விஷயங்களை பேச அழைப்பு விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு விஜய் -ம் பொங்கல் கழித்து பேசுவோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார கூட்டத்தின் போது அங்கு தூக்கிப்பிடிக்கப்பட்ட தவெக கொடியை பார்த்து அவர் “பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஒரு புதிய கூட்டணி அமையும்” என தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைத்து இந்த தேர்தலில் வெற்றி பெறுவாரா? அல்லது தன்னிச்சையாக நின்று திமுகவை எதிர்த்து போராடுவாரா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.