

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது “தேர்தல் பணிகள் சிறப்பாக நடந்தது, எல்லாரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம், நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்” என்றும் “இதில் எந்த சந்தேகமும் இல்லை, தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள்” என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “முதலமைச்சர் சாதனை என்று டுவிட் போடுகிறார். ஆனால் மக்கள் வேதனையில் தான் இருந்தார்கள். பெண்களுக்கான பாதுகாப்பு என எல்லாமே கேள்விக்குறியாகவே இருந்து கொண்டு இருந்தது. இதனால் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அதையடுத்து தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய அவர் “விஜய் நல்ல நடிகராக இருக்கலாம், ஆனால் குழந்தைகளை வைத்து பெற்றோர்களிடம் தனக்கு வாக்கு செலுத்த வேண்டும் சொல்வது தவறு. குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்யக் கூடாது என்பது விதியாக உள்ளது, குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை விதைக்க கூடாது” என்று பேசியிருந்தார். மேலும் “குழந்தைகள் படிக்க வேண்டும், அவர்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும், கல்லூரியை தாண்டிய பின் வாக்களிப்பது குறித்து சிந்திப்பது பரவாயில்லை, வாக்களிக்க ஒரு வயது இருக்கிறது, குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என்பதை விஜய் உணர வேண்டும்” என்றும் “எல்லாமே சுய நிலை அரசியலாக சென்று கொண்டு இருக்கிறதா? என்று பயமாக உள்ளது” என்றும் தெரிவித்தார்
மேலும் விஜய்யின் ஆன்மீக பயணம் குறித்து பேசிய அவர் “தேர்தலுக்கு முன்பாக எந்த அடையாளமும் காண்பிக்க மாட்டேன் என இருந்த விஜய், தேர்தலுக்குப் பின்பு சில அடையாளங்களை அவர் காண்பிக்கிறார்” என்று விமர்சித்தார். அதையடுத்து “ஆன்மீக பயணத்தை குற்றம் சொல்ல மாட்டேன், விஜய் வெளிப்படையாக சாமி கும்பிடுகிறார், ஸ்டாலின் மாதிரி இல்லாமல் சாமி கும்பிடும் விஜய், அந்த வகையில் அவரை வகையில் பாராட்டுகிறேன். ஆன்மீக தேடல் ஆரோக்கியம் தான்” என்றும் குறிப்பிட்டார்.
நேற்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் “தமிழகத்தில் விசில் புரட்சி நடக்கிறது, விஜய்யின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது, 200 தொகுதிகளை தாண்டி விசில் வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்ட போது, “200 தாண்டி விசில் போகும் என செங்கோட்டையன் சொல்வது விசில் சத்தம் போல் இல்லை, பாம் சத்தம் போல் இருக்கிறது. விசிலுக்கு என்று ஒரு சத்தம் இருக்கிறது, அதை தாண்டி போக முடியாது” என்றும் நகைச்சுவையாக விமர்சித்தார்.
மேலும் “200 தாண்டுவது என்பது பிரம்மாண்ட கனவு, செங்கோட்டையன் கோட்டை கட்டுவது எப்படிப்பட்ட கனவு என்று எல்லோருக்கும் தெரியும்” என்றும் “கனவு காண அனைவருக்கும் உரிமை இருக்கிறது, நல்ல கனவு காணலாம், ஆனால் மே 4ம் தேதி வரை எண்ண எண்ண கனவு காண்பார்கள்” என்றும் செங்கோட்டையனின் கணிப்புகளுக்கு பதிலளித்தார். இறுதியாக விஜய் குறித்து பேசிய தமிழிசை “விஜய் தேர்தலுக்கு பின் சூட்டிங்கிற்கு இடம் தேடி செல்வார்” என்றும் அவர் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.