

இன்று நடந்த சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி, தகவல் அறியும் உரிமை கமிஷனிலே பலரும் தங்களது கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். ஆனால் உரிமை கமிஷன் உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் இன்னும் தகவல் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஒளிவுமறைவு இல்லாத அரசு, போலித்தன்மை இல்லாத அரசு என்று கூறுவதால் உறுப்பினர்களை அமைக்குமாறு அவர் கூறினார்.
பிரவீன் சக்கரவர்த்திக்கென்று இந்த அரசு தனியாக ஏதேனும் ஒரு கமிட்டியை இந்த அரசு தந்திருக்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்டு பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்ய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த அவையில் அங்கத்தினராக இல்லாதவர் அவரை பற்றி பேசுவது வழக்கத்திற்கு மாறான ஒன்று என்று பேசியதால் அவையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. மேலும், நீர்வளத்துறையில் 3% கமிஷன் கேட்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டினை திமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்த நிலையில், அதற்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், "அதெல்லாம் அந்த காலம் ஏதுவாக இருந்தாலும் ஆதாரத்தோடு பேசவேண்டும்" என்று அவர் பதிலளித்தார்.
மேலும், மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒரு பைசா தொடமாட்டோம். தொட விடமாட்டோம்; தொட்டால் விடமாட்டோம்; இதற்குமுன்பு தொட்டவர்களையும் விடமாட்டோம் என்ற முதல்வர் கடந்த காலத்தில் குறிப்பிட்ட ஒரு வாக்கியத்தை மேற்கோளிட்டு காட்டி "பனையூரிலே சனிக்கிழமை நடக்கின்ற வாரச்சந்தையில் சென்று பார்த்தால் இதற்கு முன்பு தொட்டவர்கள்தான் இருக்கிறார்கள்" என்று கூறினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் செங்கோட்டையன் "பனையூரில் இருந்துதான் நீங்களும் வந்தீர்கள்" என்று குறுக்கிட்டார். அப்போது, "சப்ஜெக்ட்க்கு வாங்க" என்று சபாநாயகர் கூற அதற்கு சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி, "நீங்கள் கொடுத்த நிதிநிலை அறிக்கையில் இருந்துதான் பேசுகிறேன், அதிலிருந்து பேசக்கூடாது என்றால் நான் என்ன செய்வது? வேறு ஒரு நிதிநிலை அறிக்கையைக்கூட கொடுங்க; அதிலிருந்து பேசுகிறேன்" என்று அவர் கூற அவையில் சிரிப்பலை பரவியது.
மேலும், 'நம்மைக் காக்கும் 48' திட்டம் குறித்த எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்று அவர் தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 'வெற்றி 150 நாள் திட்டம்' என்பது இந்த அரசு ஒன்றிய அரசிற்கு பணிந்து விட்டது என்பதற்கு ஒரு உதாரணம். 'வி.பி.ஜி. ராம்ஜி' திட்டத்தை எதிர்த்ததற்காக எங்களுக்கு நிதி அளிக்கப்படாமல் இருந்தது. ஆனாலும் கூட 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்'தான் வேண்டும் என்று நாங்கள் கூறினோம். ஆனால் இதனை ஒன்றிய அரசிற்காக சத்தமில்லாமல் செய்துள்ளீர்கள் அதுதான் உங்களின் சாதனை; சத்தமே இல்லாமல் சரண்டர் ஆகிவிட்டிர்கள் ஒன்றிய அரசிடம் என்று தவெக-வை சாடினார். அப்போது அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து பேசிய ரகுபதி, "எதிர்க்கட்சி என்றால் விமர்சிக்கத்தான் செய்வார்கள். பட்ஜெட்டை வரவேற்கிறேன் என்று வரவேற்றுவிட்டு உட்காரவா என்னை என் தொகுதி மக்கள் தேர்தெடுத்தார்கள்?. பட்ஜெட்டில் உள்ள நிறைகுறைகளை கூறவேண்டும் அதுதான் எங்களுடைய கடமை" என்று அவர் பேசினார்.
"முதலமைச்சர் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார், லஞ்சம் வாங்கக்கூடாது என்று அதற்காக வெளியே அது எதுவும் நடக்காமல் இருக்கிறதா?. அவர் சொல்வதை நீங்கள் யாரும் கேட்பதில்லை அதுதான் எங்கள் வருத்தம்", என்று தனது கேள்விகளை முன்வைத்தார். மேலும், திமுக காலத்தில் போடப்பட்ட பட்ஜெட்டை விட அதிகமாக செலவிற்கு போட்டுள்ளதாகவும், 200 யூனிட் மின்சாரம் பலருக்கும் கிடைக்கவில்லை என்றும், மகளிர் உரிமைத்தொகை அதுவும் கிடைக்கவில்லை என்று அவர் பேசினார். மேலும், தமிழ் புதல்வன், புதுமை பெண் திட்டம், மகளிர் விடியல் பயணம் ஆகியவற்றின் மூலம் பயன் பெரும் ஒவ்வொருவரின் மனதிலும் எங்கள் தலைவர் ஸ்டாலின் இருக்கிறார் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்