தவெக தலைவர் விஜய்க்கு அச்சுறுத்தல், உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மனு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை இதுவரை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விஜய்க்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் திரும்ப பெறப்பட்டன. இந்த நிலையில் விஜய்க்கு உச்சப்பட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த டில்லி பாபு, "தமிழ்நாட்டின் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடந்து முடிந்த சட்ட பேரவை தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியானது மக்கள் அனைவரும் எதிர்பார்த்தது போல் உள்ளது. இந்த வெற்றி தமிழ்நாட்டின் மக்களின் வெற்றி. இந்த வெற்றியை உறுதி செய்து ஆட்சி அமைக்கும் தருவாயில் உள்ள சூழ் நிலையில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து பல்வேறு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
அரசியல் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். எனவே தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க முடியாததற்கு இக்கட்டான சூழ் நிலையை ஏற்படுத்துகின்றனர். பாஜக, ஆர்எஸ்எஸ் செய்யும் சூழ்ச்சியின் வாயிலாக அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என கருதுகிறோம். இந்த சூழ்நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கும் தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கும் உரிய உச்சகட்ட பாதுகாப்பை காவல்துறை அளிக்க வேண்டும்" என்று டில்லி பாபு கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.