
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்துத் திரைப்படங்கள் மீதும் 100% சுங்க வரி (Tariff) விதிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அத்துடன், தளவாடப் பொருட்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்யாத நாடுகள் மீது கணிசமான வரியை விதிக்கப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பை அதிபர் டிரம்ப் , தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ரூத் சோஷியல்’ மூலம் வெளியிட்டார்.
திரைப்படத் தயாரிப்புத் தொழில் அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளால் "ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாயைத் திருடுவது போல" திருடப்பட்டு விட்டதாகவும், இதன் காரணமாகத் தனது இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், "பல காலமாக, முடிவே இல்லாமல் இருக்கும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்துத் திரைப்படங்கள் மீதும் 100% வரியை நான் விதிக்கப் போகிறேன்" என்று உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக, திரைப்படத் துறையின் மையமாக விளங்கும் கலிபோர்னியா மாகாணத்தை ஆட்சி செய்யும் ஆளுநரை 'பலவீனமானவர் மற்றும் திறமையற்றவர்' என்று விமர்சித்த டிரம்ப், இந்தக் கலிபோர்னியா மாகாணம் தான் இந்தத் திருட்டுச் செயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். இருப்பினும், இந்த 100% வரிவிதிப்பு எப்படி நடைமுறைப்படுத்தப்படும் அல்லது சர்வதேசக் கூட்டுத் தயாரிப்புகள், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்கள் ஆகியவற்றுக்கு இது பொருந்துமா என்பது குறித்து அவர் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.
தளவாடங்கள் மீதான கடுமையான வரி அச்சுறுத்தல்
திரைப்படங்களைத் தொடர்ந்து, தளவாடங்கள் (Furniture) இறக்குமதி குறித்தும் டிரம்ப் ஒரு தனிப் பதிவை வெளியிட்டார்.
சீனா உள்ளிட்ட பிற நாடுகளால் தளவாடத் தொழிலை முற்றிலும் இழந்த வட கரோலினா (North Carolina) மாகாணத்தை மீண்டும் சிறந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில், "அமெரிக்காவில் தளவாடங்களைத் தயாரிக்காத எந்த நாடு மீதும் நான் கணிசமான வரியை விதிக்கப் போகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த வாரம், சமையலறை கேபினட்கள் (Kitchen Cabinets) மற்றும் குளியலறை வேனிட்டிகள் (Bathroom Vanities) மீது 50% வரியும், அப்ஹோல்ஸ்டர்ட் தளவாடங்கள் (Upholstered Furniture) மீது 30% வரியும் அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்று அவர் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த புதிய மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வரி விதிப்புகள், அமெரிக்கத் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதிபர் டிரம்ப் எடுத்துவரும் தொடர் வர்த்தகப் பாதுகாப்புக் கொள்கைகளின் ஒரு பகுதியாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.