
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் வரிகள் விதிக்கும் நாடுகளுக்கு, "கடுமையான" புதிய ஏற்றுமதி வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தியுள்ளார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப்:
தனது பிரத்யேக சமூக ஊடக தளமான 'ட்ரூத் சோஷியலில்' டிரம்ப், "அமெரிக்காவின் அற்புதமான தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபராக நான் உறுதியாக நிற்பேன்" என்று ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
"டிஜிட்டல் வரிகள், டிஜிட்டல் சேவைகள் சட்டங்கள் மற்றும் டிஜிட்டல் சந்தை விதிகள் அனைத்தும் அமெரிக்க தொழில்நுட்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது அப்பட்டமான பாகுபாடு," என்று அவர் குற்றம் சாட்டினார்.
"வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால், இந்த வரிகள் சீனாவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்கின்றன. இந்த பாகுபாடு இப்போதே முடிவுக்கு வர வேண்டும்!" என்று டிரம்ப் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
அவர் மேலும், "நமது மிகவும் பாதுகாக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிப்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா விதிக்கும்" என்றும் எச்சரித்தார்.
கடும் வரிகளின் அச்சுறுத்தல்:
"டிஜிட்டல் வரிகள், சட்டம், அல்லது விதிகளை அமல்படுத்தியுள்ள அனைத்து நாடுகளுக்கும் நான் ஒரு வெளிப்படையான எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த பாரபட்சமான நடவடிக்கைகள் நீக்கப்படாவிட்டால், அமெரிக்க அதிபராக, அந்த நாட்டின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் மீது நான் குறிப்பிடத்தக்க கூடுதல் வரிகளை விதிப்பேன்," என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"அமெரிக்காவும், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களும் இனி உலகிற்கு வெறும் பணப் பெட்டியாகவோ (piggy bank) அல்லது கால்மிதியாகவோ (doormat) இருக்காது. அமெரிக்கா மற்றும் நமது சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மரியாதை காட்டுங்கள் அல்லது அதன் விளைவுகளை எதிர்கொள்ள தயாராகுங்கள்!" என்று டிரம்ப் தனது வலுவான நிலைப்பாட்டை அழுத்தமாகப் பதிவு செய்தார்.
இந்த எச்சரிக்கை, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் "நியாயமற்ற வர்த்தகத் தடைகளை" கூட்டாக அகற்றுவதற்கும், "எலெக்ட்ரானிக் தகவல்தொடர்புகளுக்கு சுங்க வரிகளை விதிக்காமல் இருப்பதற்கும்" ஒரு கூட்டு அறிக்கையில் ஒப்புக்கொண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு வந்துள்ளது. இந்த அறிவிப்பானது வர்த்தக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் வரிகள், டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளன. கடந்த ஜூன் மாதம், இதே போன்ற வரி விவகாரம் தொடர்பாக கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் நிர்வாகம் இந்த விவகாரத்தில் எந்த சமரசத்திற்கும் தயாராக இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.