6 நாட்கள் காட்டுக்குள் உணவின்றி தவித்த சிறுவன்! உயிருடன் மீட்க உதவிய அந்த ஒரு பொருள் எது?

இரவு நேரங்களில் அப்பகுதியில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று காவல்துறையினர் அச்சமடைந்தனர்.
 17-Year-Old Boy Survives 6 Days Lost in Deep Forest: What Was the One Item That Saved His Life?
6 நாட்கள் காட்டுக்குள் உணவின்றி தவித்த சிறுவன்! உயிருடன் மீட்க உதவிய அந்த ஒரு பொருள் எது?
Published on: 
Updated on: 
2 min read

காட்டுக்குள் வழிதவறிச் சென்ற 17 வயது சிறுவன் ஒருவர், ஆறு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் செல்போன், உணவு, தண்ணீர் என எந்தவிதமான உதவியும் இல்லாமல் சிக்கிக்கொண்ட அந்தச் சிறுவனைத் தேடி நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் களமிறங்கினர். பல நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டைக்குப் பிறகும் சிறுவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். ஆனால், கடைசி நேரத்தில் ஹெலிகாப்டரில் சென்ற காவல்துறையினர் கண்டுபிடித்த ஒரு சிறிய பொருள், இந்த மீட்புப் பணியில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இறுதியில் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டு தாயுடன் சேர்க்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கிப்ஸ்லேண்ட் வனப்பகுதியில் நடைபெற்றுள்ளது. வில்லியம் என்ற 17 வயது சிறுவன் கடந்த நவம்பர் 6ஆம் தேதி தனது நண்பருடன் வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காக முகாமிட்டிருந்தான். வால்ஹல்லா ஈஸ்ட் என்ற பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருவரும் தங்கியிருந்தனர். அப்போது முகாமிலிருந்து சிறிது தூரம் சென்று கூடுதல் முகாம் உபகரணங்களை எடுத்துவருவதாகக் கூறிவிட்டுச் சென்ற வில்லியம் மீண்டும் திரும்பவில்லை. இதனால் அவருடன் இருந்த நண்பர் சுற்றியுள்ள பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளார். ஆனால், எங்கும் சிறுவனைக் காண முடியவில்லை.

சிறுவன் தனது செல்போன், உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை முகாமிலேயே விட்டுச் சென்றிருந்தது தெரியவந்தது. இதனால் அவர் காட்டுக்குள் எங்கு சென்றார், எந்த நிலையில் இருக்கிறார் என்பது தெரியாமல் குடும்பத்தினர் பதற்றமடைந்தனர். குறிப்பாக, இரவு நேரங்களில் அப்பகுதியில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று காவல்துறையினர் அச்சமடைந்தனர்.

காவல்துறை, தீயணைப்புப் படையினர், மோப்ப நாய்கள் பிரிவு, நீர்நிலைகளில் தேடுதல் நடத்தும் சிறப்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மிகப்பெரிய தேடுதல் பணியைத் தொடங்கினர். ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் வனப்பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டது. அடர்ந்த மரங்கள், கரடுமுரடான பாதைகள், ஆழமான பள்ளங்கள் மற்றும் நீரோடைகள் என பல்வேறு இடங்களில் தேடுதல் விரிவுபடுத்தப்பட்டது. இருப்பினும், ஐந்து நாட்கள் கடந்தும் சிறுவன் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் தேடுதல் பணியின்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. வனப்பகுதியில் கிடந்த மீன்பிடி உபகரணங்களை வைக்கும் பெட்டி ஒன்றை வானிலிருந்து பார்த்த காவல்துறையினர், அது சிறுவனுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். உடனடியாக அந்தப் பகுதியை நெருக்கமாகக் கண்காணித்தபோது, அருகில் உள்ள சிறிய நீரோடைப் பகுதியில் ஒருவர் படுத்திருப்பது தெரியவந்தது. அவர் காணாமல் போன வில்லியம் என்பது உறுதி செய்யப்பட்டது.

சிறுவன் இருந்த இடத்தை அடைய ஹெலிகாப்டரில் இருந்து மீட்புப் பணியாளர்கள் கீழே இறக்கப்பட்டனர். அப்போது ஹெலிகாப்டரின் சத்தம் கேட்டு கண்விழித்த வில்லியம், தன்னைத் தேடி வந்திருப்பதை உணர்ந்து கையை உயர்த்தி சைகை காட்டியுள்ளார். பின்னர் அவரை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக ஹெலிகாப்டரில் ஏற்றி மீட்டனர். ஆறு நாட்களாகத் தேடப்பட்ட சிறுவன் உயிருடன் கிடைத்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் பெரும் நிம்மதி அடைந்தனர். மீட்கப்பட்டபோது வில்லியம் வெயிலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பெரிய அளவிலான காயங்கள் இன்றி நல்ல உடல்நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அவர் தனது தாயாருடன் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். தனது மகன் உயிருடன் திரும்பியதைப் பார்த்த தாய் எலிசபெத் ஆனந்தக் கண்ணீருடன் அவரைக் கட்டியணைத்தார். மகனை மீண்டும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவன் எப்படி ஆறு நாட்கள் காட்டுக்குள் உயிர் பிழைத்தார் என்பது குறித்த விவரங்களையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். அவர் கரடுமுரடான நிலப்பகுதியில் பல நாட்கள் நடந்து சென்றதாகவும், பின்னர் செங்குத்தான பள்ளத்தில் சிக்கி வெளியே வர முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடைசி இரண்டு நாட்களை நீரோடை அருகே ஒரே இடத்தில் கழித்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய மீன்பிடிப் பெட்டியைக் கண்டறிந்ததன் மூலம் ஆறு நாட்களாகத் தொடர்ந்த தேடுதல் முடிவுக்கு வந்துள்ளது. பல நூறு கிலோமீட்டர் பரப்பளவிலான வனப்பகுதியில் நடைபெற்ற இந்தத் தேடுதல் பணியின் முடிவில் சிறுவன் உயிருடன் கிடைத்தது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.

 17-Year-Old Boy Survives 6 Days Lost in Deep Forest: What Was the One Item That Saved His Life?
``அவள் எங்களை எதிரியாக பார்த்தாள்.." மனேகா காந்தி பாஜகவில் இருப்பது ஏன்?.. உள்வீட்டு பகையை வெளிப்படையாக பேசிய சோனியா காந்தி!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.