``அவள் எங்களை எதிரியாக பார்த்தாள்.." மனேகா காந்தி பாஜகவில் இருப்பது ஏன்?.. உள்வீட்டு பகையை வெளிப்படையாக பேசிய சோனியா காந்தி!

சஞ்சயை விட மனேகா பத்து வயது இளையவர். மேலும், சஞ்சய் இந்திராவிடம் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியபோது மனேகா சிறுமியாகவே இருந்தார். திருமணம் நடைபெற்றபோது மனேகாவுக்கு வெறும் 18 வயதுதான்.
Why is Maneka Gandhi in the BJP? Sonia Gandhi Spoke Openly About the Internal Family Feud!
``அவள் எங்களை எதிரியாக பார்த்தாள்.." மனேகா காந்தி பாஜகவில் இருப்பது ஏன்?.. உள்வீட்டு பகையை வெளிப்படையாக பேசிய சோனியா காந்தி!
Published on: 
Updated on: 
4 min read

சோனியா காந்தி தனது சுயசரிதை நினைவுக் குறிப்புப் புத்தகத்தில் வெளிநாட்டவராக இந்தியா வந்து, மிகப் பெரிய கட்சியின் தலைமை குடும்பத்திலும் நாட்டின் அரசியலிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு தான் கடந்து வந்த பாதையை விளக்கியுள்ளார்.

இதில் அவருக்கு மிக நெருக்கமான நபர்கள் குறித்து வெளிப்படையாகப் பல கருத்துகளை எழுதியுள்ளார். நாட்டின் அரசியலை முடிவு செய்யும் நாற்காலியில் நீண்டகாலம் இடம் பெற்றவர் என்பதால் சோனியாவின் நினைவுக் குறிப்புகள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அதே நேரத்தில், ஒரு பெண்மணியாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்து வந்த பாதையும் பேசப்பட்டு வருகிறது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் இழப்பு குறித்து உருக்கமாக எழுதியிருக்கிறார் சோனியா.

சோனியாவின் குடும்பம் பற்றிய குறிப்புகள் நுணுக்கமாகக் கவனிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாட்டையே உலுக்கிய சஞ்சய் காந்தியின் மர்மங்கள் சூழ்ந்த மரணம் மற்றும் அவரது மனைவி மனேகாவின் வெளியேற்றம் பேசுபொருளாக எழுந்துள்ளது.

சஞ்சய் காந்தியின் அதிகாரமிக்க அரசியல் நடவடிக்கைகளை மனேகா கட்டுப்படுத்தாமல் அவற்றை ஆதரித்தது இந்திராவுக்கு வருத்தத்தைக் கொடுத்ததாக சோனியா காந்தி எழுதியுள்ளார். அத்துடன், ஒரு 'ரியாலிட்டி ஷோ' போல அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் மனேகா காந்தி வீட்டை விட்டு வெளியேறும் நிலை வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Sonia Gandhi with Her Book Belonging: A Journey of Live
Sonia Gandhi with Her Book Belonging: A Journey of Live

தனது மாமியாருக்கும் அப்போதைய அமைச்சரவைச் செயலாளர் பி.என். தாருக்கும் இடையே நடந்த ஒரு உரையாடலை நினைவுகூர்ந்த சோனியா, இந்திரா தனது இளைய மருமகள் மனேகாவைப் பற்றி, “அவளுக்கு இப்பொழுதே சிறகுகள் முளைக்கத் தொடங்கிவிட்டன” என்று கூறியதாக எழுதியுள்ளார்.

மேலும், மனேகா காந்தி தங்களை எப்போதும் எதிரியாகப் பார்த்ததாகவும், அவருக்குத் தெரிந்த பத்திரிகையாளர்களை வைத்து ராஜீவ் மற்றும் சோனியா குறித்து அவதூறுகளை எழுத வைத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

“1977 தேர்தலில் தோல்வியுற்றபோது, நானும் ராஜீவும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல எண்ணியிருந்தோம் என்ற அப்பட்டமான பொய்தான் எங்களை மிகவும் எரிச்சலூட்டியது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sanjay Gandhi
Sanjay Gandhi - Indira Gandhi

மேலும், மனேகா - சஞ்சய் திருமணம் குறித்து இந்திரா காந்திக்குக் கவலைகள் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். 1973-ல் ஒரு பள்ளித் தோழியின் நிச்சயதார்த்த விழாவில் மனேகா மற்றும் சஞ்சய் சந்தித்துள்ளனர். முதல் சந்திப்பிலிருந்தே அவர்களின் உறவு தொடங்கியுள்ளது.

சஞ்சயை விட மனேகா பத்து வயது இளையவர். மேலும், சஞ்சய் இந்திராவிடம் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியபோது மனேகா சிறுமியாகவே இருந்தார்.

இது குறித்து, "வயதில் மூத்தவராகவும், தன் பழக்கவழக்கங்களில் உறுதியாகவும் இருந்த சஞ்சய்க்கும், அவரை விட மிகவும் இளையவரான மனேகாவுக்கும், இந்த இரு நிலைகளுக்கும் பழகுவது கடினமாக இருக்கும் என்று என் மாமியார் கருதினார்," என்று சோனியா எழுதுகிறார்.

1974-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததோடு, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது மனேகாவுக்கு வெறும் 18 வயதுதான். சஞ்சய் தனது தாயின் நகைப் பெட்டியிலிருந்து மனேகாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்ததாகவும், அதனை "சிறிய மாணிக்கங்களால் சூழப்பட்ட இதய வடிவ ஓப்பல்" என்று வர்ணித்ததாகவும் சோனியா நினைவுகூர்கிறார்.

ஆரம்பத்தில் மனேகாவை ஒரு துடிப்பான இளம் பெண்ணாகப் பார்த்துள்ளார் சோனியா. "மனேகா மிகுந்த உற்சாகமும், பேச்சுத்திறனும், ஆர்வமும் நிறைந்த ஒரு பெண்ணாக இருந்தாள்," என்று அவர் எழுதுகிறார்.

Sanjay Gandhi Wedding
Sanjay Gandhi Wedding

ஆனால், காலப்போக்கில் அந்த இரண்டு மருமகள்களுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது. குடும்பத்தில் இருவருக்கும் இடம் உண்டு என்று தான் நம்பியதாக சோனியா கூறுகிறார். "என்னைப் பொறுத்தவரை, நாங்கள் இருவரும் அந்த வீட்டின் சமமான மகள்கள், எங்கள் இருவருக்கும் போதுமான இடம் இருந்தது. ஆனால், அவள் (மனேகா) அதை ஒரு அவமானமாகக் கருதியிருக்கலாம்," என்று அவர் எழுதுகிறார்.

சஞ்சய்க்கும் மனேகாவுக்கும் வாக்குவாதம் வந்தபோது மனேகா தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அது வீட்டில் இருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும் சோனியா எழுதியுள்ளார்.

அத்துடன், இந்திரா காந்திக்குத் தெரியாமல் சஞ்சய் அரசியல் முடிவுகள் எடுத்தபோது, தாய்க்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதங்கள் முற்றுகையில் மனேகா குறுக்கிட்டதாகவும், இந்திரா காந்தி கோபப்பட்டதால் பின்வாங்கியதாகவும் சோனியா குறிப்பிட்டுள்ளார். "அன்று அவள் விரைவாகப் பின்வாங்கினாள், ஆனால் எங்கள் மீதான அவளது பகைமை மேலும் அதிகரித்தது," என சோனியா எழுதியுள்ளார்.

1980 ஜூன் மாதம் சஞ்சய் விமான விபத்தில் இறந்த பிறகு, மனேகாவின் அரசியல் ஆசை மற்றொரு சிக்கலாக உருவெடுத்துள்ளது.

அப்போது 23 வயதான மனேகா, வருண் என்ற மூன்று மாத மகனின் விதவைத் தாயாக இருந்தார். அவருக்கு ஒரு அரசியல் பொறுப்பை வழங்குவது குறித்து இந்திரா சிந்தித்து வந்ததாக சோனியா கூறுகிறார்.

"ஆனால், அவரது (மனேகா) பார்வை வேறு ஒன்றில் இருந்தது என்பது தெளிவாகியது," என்று சோனியா எழுதுகிறார்.

இந்திராவின் இளைய மகனான சஞ்சய் உயிருடன் இருந்தவரை அவரே அரசியல் வாரிசாகப் பார்க்கப்பட்டார். ஏனென்றால், ராஜீவ் அரசியலுக்குப் பொருந்தாத சாந்தமான நபராகப் பார்க்கப்பட்டார். சஞ்சய் மரணத்துக்குப் பிறகு சில ஆண்டுகளில் இந்திரா காந்தி - மனேகா இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவர் வீட்டிலிருந்து விலக்கப்பட்டார்.

1981 மார்ச் மாதம், வசுந்தரா ராஜேவின் வீட்டில் வருணின் முதல் பிறந்தநாள் விழாவை மனேகா ஏற்பாடு செய்தபோது, இந்தக் கருத்து வேறுபாடு உச்சக்கட்டத்தை அடைந்தது.

ராஜேவை ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என்றும், இந்திராவின் அரசியல் எதிரி என்றும் சோனியா விவரிக்கிறார். மேலும், மனேகாவின் 'சூர்யா' பத்திரிகை ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டருக்கு விற்கப்பட்டதற்கும் இந்த நிகழ்விற்கும் அவர் தொடர்புபடுத்துகிறார்.

இந்திராவின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, மனேகா இறுதியில் காந்தி இல்லத்தை விட்டு வெளியேறினார். "அந்தச் சம்பவம் முழுவதும் கையாளப்பட்ட விதமும், அதைத் தொடர்ந்து நடந்த பிரச்சாரக் கூத்தும், அந்த இழிவான நிகழ்வை இன்று 'ரியாலிட்டி ஷோ' என்று அழைக்கப்படும் ஒன்றாக மாற்றிவிட்டது," என்று சோனியா எழுதுகிறார்.

குழந்தை வருண் விஷயத்திலும் இந்தக் கருத்து வேறுபாடுகள் தாக்கம் செலுத்தியுள்ளன. குழந்தையைச் சந்திக்கும் உரிமையைப் பெறுவதற்காகக் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகியதாக சோனியா நினைவுகூர்கிறார்.

வருணுக்கு நான்கு வயதாக இருந்தபோது, அவனது மழலையர் பள்ளியில் அவனுக்காகப் பரிசுகளை வைத்துவிட்டுச் செல்லுமாறு இந்திரா, சோனியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு, குழந்தையைக் கடத்துவதற்காகத் தான் அனுப்பப்பட்டதாக மனேகா செய்தித்தாள்களில் தன் மீது குற்றம் சாட்டியதாக சோனியா கூறுகிறார்.

மனேகா 1984 மக்களவைத் தேர்தலில் ராஜீவுக்கு எதிராகச் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர், அவர் 1988-ல் வி.பி. சிங்கின் ஜனதா தளத்திலும், 2004-ல் பாஜகவிலும் இணைந்தார். பாஜகவில் சில தேர்தல்களில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஆனால், 2024 தேர்தலில் தோல்வியடைந்தார். வருண் காந்தியும் பாஜகவில் பயணித்து வருகிறார். தேசிய செயற்குழுவில் இருந்த அவர், கடந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் இப்போது உறுப்பினராக மட்டும் தொடர்கிறார். வருகின்ற உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவின் துருப்புச் சீட்டாக இருவரும் திகழ்வர்.

Why is Maneka Gandhi in the BJP? Sonia Gandhi Spoke Openly About the Internal Family Feud!
வெளியாகும் மிக முக்கிய அறிவிப்பு? உச்சக்கட்ட கலக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள் - விட்டு விளாச காத்திருக்கும் முதல்வர் விஜய்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.