சிங்கப்பூரின் பென்கூலன் பகுதியில் உள்ள பர்லிங்டன் ஸ்கொயரில் கடந்த 100 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற கான்டோனீஸ் உணவகமான 'விங் சியோங் ஃபேட்டிஸ்' (Wing Seong Fatty’s), வரும் ஜூன் 28-ஆம் தேதியுடன் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்ள உள்ளது. இந்த உணவகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வாரிசுகள் யாரும் இல்லாததே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. உணவகத்தின் பங்குதாரர்கள் மற்றும் மேலாளர்கள் தற்போது வயதாகிவிட்ட நிலையில், அடுத்த தலைமுறையினர் தங்கள் சொந்தத் தொழில் மற்றும் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். நீண்ட யோசனைக்குப் பிறகு, இந்த கடினமான முடிவை நிர்வாகம் எடுத்துள்ளதாக ஃபேஸ்புக் பதிவில் உருக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1926-ஆம் ஆண்டு இந்த உணவகத்தை அதன் தற்போதைய உரிமையாளரின் தாத்தாவான ஆ யுயென் தொடங்கினார். முதலில் ஆல்பர்ட் தெருவில் இருந்த ஒரு சிறிய கடையில் 'விங் சியோங்' (Wing Seong) என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த உணவகம், பின்னாளில் ஒரு புகழ்பெற்ற இடமாக மாறியது. நிறுவனரின் மகனான ஆ சான் செங், உணவகத்தை நிர்வகிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். அவரது உடல்வாகு சற்று பருமனாக இருந்ததால், அனைவரும் அவரை அன்போடு 'ஃபேட்டி' (Fatty) என்று அழைத்தனர். காலப்போக்கில், இந்த உணவகத்தின் பெயரே 'விங் சியோங் ஃபேட்டிஸ்' என்று மாறியது. 1987-ஆம் ஆண்டு ஆல்பர்ட் காம்ப்ளக்ஸிற்கு மாறிய உணவகம், இறுதியாக 1999-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பர்லிங்டன் ஸ்கொயருக்கு இடம் பெயர்ந்தது.
இந்த உணவகம் சாதாரண மக்கள் மட்டுமல்லாது, குவாண்டாஸ் (Qantas), பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் போன்ற முன்னணி விமான நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் விமானிகள் அடிக்கடி வந்து செல்லும் ஒரு முக்கிய இடமாகத் திகழ்ந்தது. இரண்டாம் உலகப் போரின்போது, உரிமையாளர் ஆ யுயென் தனது மகன் சான் செங்குடன் சேர்ந்து, போர் கைதிகளுக்கு ரகசியமாக உணவளித்து வந்தார். அந்த கைதிகளில் பலர் ஆஸ்திரேலிய நாட்டு விமானப் படை வீரர்கள். போருக்குப் பிறகு, அவர்கள் குவாண்டாஸ் விமான நிறுவனத்தில் பணிபுரிந்தனர். 1947-ஆம் ஆண்டு சிட்னி-லண்டன் விமானப் போக்குவரத்து தொடங்கியபோது, சிங்கப்பூரில் தங்கும் விமானிகள் மற்றும் பணியாளர்களின் ஒரே விருப்பமாக 'ஃபேட்டிஸ்' உணவகம் இருந்தது. இந்தத் தொடர்பு கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஹார்ஸ் (HARS) விமான அருங்காட்சியகம், இந்த உணவகத்தை வெறும் உணவு கிடைக்கும் இடமாக மட்டும் பார்க்காமல், முன்னாள் வீரர்கள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு ஒரு வரலாற்றுச் சின்னமாகவே கருதுகிறது. இத்தனை ஆண்டுகளாகத் தங்கள் உணவகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு நிர்வாகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளது. "கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நீங்கள் அளித்த ஆதரவிற்கும், நட்பிற்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களுக்குச் சேவை செய்தது எங்களின் மிகப்பெரிய பாக்கியம்" என்று உணவகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் உரிமையாளர்கள் உருக்கமாகப் பதிவிட்டுள்ளனர். சிங்கப்பூரின் உணவு வரலாற்றில் ஒரு பெரும் பகுதியை உருவாக்கிய 'விங் சியோங் ஃபேட்டிஸ்', ஜூன் மாத இறுதியுடன் விடைபெறுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.