

நீங்கள் அடுத்த சில மாதங்களில் ஏர் இந்தியா விமானம் மூலம் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஜூன் முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலக்கட்டத்தில், தனது சர்வதேச விமானச் சேவைகளில் ஏர் இந்தியா நிறுவனம் மிகப்பெரிய மாற்றங்களையும், ரத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் பல ஆசிய நாடுகளுக்கான விமானச் சேவைகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. முறையான முன்னறிவிப்பின்றி கடைசி நேரத்தில் விமானங்கள் ரத்து செய்யப்படுவதைத் தவிர்க்கவே, இந்தத் தற்காலிக மாற்றங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் தற்போது நீடித்து வரும் இரண்டு முக்கியமான சவால்கள் காரணமாகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாடுகளின் வான்வெளியைப் பயன்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச விமான எரிபொருளின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது போன்றவை விமானங்களை இயக்குவதில் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளன. இதனால், கடைசி நேரக் குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு, ஏர் இந்தியா தனது விமான அட்டவணையைச் சீரமைத்துள்ளது. இந்த மாற்றங்களுக்குப் பிறகும், ஐந்து கண்டங்களில் மாதம் 1,200-க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை ஏர் இந்தியா தொடர்ந்து இயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக, டெல்லி - சிகாகோ இடையிலான விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ, டொராண்டோ மற்றும் வான்கூவர் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மும்பையிலிருந்து நெவார்க் செல்லும் விமானங்கள் இனி தினமும் இயக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியும் உள்ளது. ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை, பாரிஸ், ரோம், சூரிச், வியன்னா, மிலன் மற்றும் கோபன்ஹேகன் போன்ற முக்கிய நகரங்களுக்கான வாராந்திர விமானச் சேவைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளுக்கான சேவைகளிலும் பெரிய அளவில் கை வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து மெல்போர்ன் மற்றும் சிட்னி செல்லும் தினசரி விமானங்கள், இனி வாரத்திற்கு 4 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளன. ஆசியப் பிராந்தியத்தில், டெல்லியில் இருந்து ஷாங்காய் செல்லும் விமானங்கள் ஆகஸ்ட் மாதம் வரை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல், சென்னை - சிங்கப்பூர், மும்பை - டாக்கா மற்றும் டெல்லி - மாலே (மாலத்தீவு) ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் விமானச் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பேங்காக், கோலாலம்பூர், காத்மாண்டு, கொழும்பு மற்றும் வியட்நாம் நகரங்களுக்கான விமானங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக ஏர் இந்தியா உறுதி அளித்துள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது நேர மாற்றங்கள் செய்யப்பட்டாலோ, பயணிகளுக்கு மாற்று விமான முன்பதிவு அல்லது முழுத் தொகையையும் திரும்பப் பெறுவதற்கான (Full Refund) வாய்ப்புகள் வழங்கப்படும். பயணிகள் இது குறித்த தகவல்களை ஏர் இந்தியாவினுடைய அதிகாரப்பூர்வ இணையதளம், செயலி அல்லது வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சமீபகாலமாகச் சமூக வலைதளங்களில் ஏர் இந்தியா நிறுவனம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அனைத்து சர்வதேச விமானங்களையும் ஜூலை வரை ரத்து செய்துவிட்டதாகப் பரவிய வதந்திகளுக்கு இந்த அறிவிப்பு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அத்தகைய வதந்திகள் உண்மையில்லை என்றும், தற்போதைய மாற்றங்கள் அனைத்தும் செயல்பாட்டு ரீதியிலான சீரமைப்புகள் மட்டுமே என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. திட்டமிட்ட பயணங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, பயணிகள் தங்களது விமான நிலவரத்தை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.