

அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் சமீபத்தில் புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார். ‘அமெரிக்க ஏஐ இறையாண்மை செல்வ நிதிச் சட்டம்’ எனப்படும் இந்த மசோதா, செயற்கை நுண்ணறிவின் (AI) பொருளாதாரப் பலன்கள் சில பில்லியனர்களின் கைகளில் மட்டுமே குவிவதைத் தடுத்து, அவற்றை அமெரிக்க மக்களுக்கும் படைப்பாளிகளுக்கும் பகிர்ந்தளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், AI மற்றும் ரோபாட்டிக்ஸ் வளர்ச்சியால் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படக் கூடாது என்றும், நிறுவனங்களின் பொருளாதாரப் பலன்களில் தொழிலாளர்களுக்கும் பங்கு கிடைக்க வேண்டும் என்றும் சாண்டர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
மசோதாவை தாக்கல் செய்தபோது ஆற்றிய உரையில், பெர்னி சாண்டர்ஸ், “எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சாதாரண குடிமக்கள் என கோடிக்கணக்கான மக்களின் படைப்பாற்றல், எழுத்துகள் மற்றும் உழைப்புகள் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் சிலரால் திருடப்பட்டுள்ளன” என்று குற்றம்சாட்டினார். மேலும், மனிதகுலம் தனது கூட்டு அறிவை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.
OpenAI, Anthropic மற்றும் xAI போன்ற நிறுவனங்களின் AI தொழில்நுட்பங்கள் திடீரெனத் தோன்றியவை அல்ல என்றும், சாம் ஆல்ட்மேன் அல்லது எலான் மஸ்க் போன்ற தொழில்நுட்பத் தலைவர்களின் கற்பனையில் இருந்து அவை மட்டும் உருவாகவில்லை என்றும் சாண்டர்ஸ் வலியுறுத்தினார். மாறாக, பல தலைமுறைகளாக மனிதர்கள் உருவாக்கிய புத்தகங்கள், கலைப்படைப்புகள், பத்திரிகைச் செய்திகள் மற்றும் கணினிக் குறியீடுகள் உள்ளிட்ட ஏராளமான தரவுகளைக் கொண்டு இந்த AI மாதிரிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாண்டர்ஸ் முன்வைத்துள்ள இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், AI மூலம் உருவாகும் மிகப்பெரிய செல்வம் சில பில்லியனர்களிடம் மட்டுமே குவிவதைத் தடுப்பதாகும். இதன்படி, அமெரிக்காவின் மிகப்பெரிய AI நிறுவனங்களிடம் இருந்து ஒருமுறை 50 சதவீத பங்குகளை வரியாகப் பெற்று, அவற்றை “American AI Sovereign Wealth Fund” என்ற பொது நிதியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் கிடைக்கும் வருவாயை பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே சாண்டர்ஸின் வாதமாகும்.
மேலும், AI மாதிரிகள் தனி நிறுவனங்களின் கண்டுபிடிப்பு மட்டுமல்ல; பல தலைமுறைகளாக மனிதர்கள் உருவாக்கிய அறிவு, கலை, செய்திகள், ஆய்வுகள் மற்றும் குறியீடுகள் உள்ளிட்ட கூட்டு அறிவின் அடிப்படையிலேயே அவை வளர்ந்துள்ளன என சாண்டர்ஸ் சுட்டிக்காட்டுகிறார். எனவே, மனிதகுலத்தின் கூட்டு அறிவால் உருவாகும் AI செல்வத்தின் பலனும் மீண்டும் மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்