
அமெரிக்கா, விசா தள்ளுபடி திட்டத்தில் இல்லாத நாடுகளின் பயணிகளுக்காக, புதியதாக 250 டாலர் (சுமார் ரூ. 22,020) visa integrity fee என்ற பெயரில் ஒரு தொகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்டோபர் 1 முதல் இது அமலுக்கு வரவுள்ளது. ஏற்கனவே கடுமையான குடியேற்ற விதிகளால் சர்வதேச பயணிகளின் வருகை குறைந்து வரும் நிலையில், இந்த முடிவு பயண மற்றும் கல்வித் துறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய கட்டணம் அமலுக்கு வந்த பிறகு, அமெரிக்க விசாவுக்கான மொத்தச் செலவு 442 டாலராக (சுமார் ரூ. 38,958) உயரும். இது உலகிலேயே மிக உயர்ந்த விசா கட்டணங்களில் ஒன்றாக இருக்கும் என்று தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முடிவால் இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அமெரிக்காவுக்குச் செல்கின்றனர்.
அமெரிக்க அரசின் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சர்வதேச பயணிகளின் வருகை 3.1% குறைந்து, 19.2 மில்லியனாக இருந்தது. இது தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஏற்பட்ட சரிவு ஆகும்.
இந்தக் கட்டணம் ஒரு வழக்கமான நிர்வாக நடவடிக்கையாகத் தோன்றினாலும், இதன் விளைவுகள் மிகவும் பெரியதாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கெனவே அதிக கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளால் சிரமப்படும் பல சர்வதேச மாணவர்களுக்கு, இந்த புதிய கட்டணம் அமெரிக்காவை ஒரு ‘வரவேற்பு குறைவாக உள்ள இடம்’ போல உணர வைக்கிறது.
அமெரிக்காவுக்குப் போட்டியாக கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள், சர்வதேச திறமைகளை ஈர்க்கும் விதமாக, தங்கள் விசா மற்றும் குடியேற்ற நடைமுறைகளை எளிமையாக்கி வருகின்றன. ஆனால், அமெரிக்கா இதற்கு நேர்மாறாக, மாணவர்களை ‘பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களாக’ மட்டும் பார்க்கிறது என்ற ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Integrity Fee என்ற வார்த்தைப் பிரயோகமும் கேள்விக்குள்ளாகியுள்ளது. சர்வதேச விண்ணப்பதாரர்களுடன் 'ஒருமைப்பாடு' என்ற வார்த்தையை இணைப்பது, அவர்கள் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் வாதிடுகின்றனர். இது, உயர்கல்விக்காக நாட்டைத் தேர்ந்தெடுக்கும் இளம் மாணவர்களிடையே அமெரிக்காவின் நற்பெயருக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சூழலின் ஒரு முக்கியமான அங்கமாக உள்ளனர். அவர்கள் பட்டதாரி உதவியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கற்பிக்கும் உதவியாளர்களாக முக்கியமாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) போன்ற துறைகளில் பங்களிக்கின்றனர். சர்வதேச மாணவர்களின் வருகை குறைந்தால், புதுமைக்கான வேகம் குறையும், வகுப்பறைகளில் பன்முகத்தன்மை குறையும், மேலும் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் உலகளாவிய போட்டித்தன்மையும் பலவீனமடையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.