எரிமலை அழித்த நகரத்தில் மீண்டும் வெளிவந்த கிரேக்கக் கடவுள்களின் கதை! 2,000 ஆண்டுகள் பழமையான ஓவியத்தில் ஒளிந்திருக்கும் ஆச்சரியம்!

கி.பி. 79-ம் ஆண்டு வெசுவியஸ் (Mount Vesuvius) என்ற எரிமலை வெடித்தபோது, இந்த நகரம் எரிமலைச் சாம்பல் மற்றும் பாறைத் துகள்களால் மூடப்பட்டது.
Pompeii banquet hall ceiling reconstructed
Pompeii banquet hall ceiling reconstructed
Published on: 
Updated on: 
2 min read

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடிப்பால் சாம்பலுக்குள் புதைந்துபோன ஒரு பழமையான நகரம், இன்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு பல ஆச்சரியங்களை அளித்து வருகிறது. அந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான ஓவியங்கள் தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, கிரேக்கக் கடவுள்களின் கதையைச் சொல்லும் அழகிய ஓவியங்கள் இடம்பெற்றிருந்த விருந்து அரங்கின் மேற்கூரை தற்போது நவீன தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பு இத்தாலியில் உள்ள பாம்பேய் என்ற பழமையான நகரத்தில் நிகழ்ந்துள்ளது. கி.பி. 79-ம் ஆண்டு வெசுவியஸ் (Mount Vesuvius) என்ற எரிமலை வெடித்தபோது, இந்த நகரம் எரிமலைச் சாம்பல் மற்றும் பாறைத் துகள்களால் மூடப்பட்டது. அப்போது அங்கு வாழ்ந்த ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். வீடுகள், கடைகள், உணவகங்கள் என ஒரு முழு நகரமே மண்ணுக்குள் புதைந்தது. காலப்போக்கில் அந்த நகரம் வரலாற்றின் முக்கியமான தொல்லியல் இடமாக மாறியது.

தற்போது அங்கு நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளின்போது பல பழமையான கட்டிடங்களும் ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பேக்கரி ஹவுஸ் என்று அழைக்கப்படும் கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்திருந்த விருந்து அரங்கின் மேற்கூரையில் கிரேக்கப் புராணக் கதைகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஓவியங்களில் முக்கியமாக கிரேக்கக் கடவுளான டயோனிசஸ் மற்றும் அரியட்னே ஆகியோரின் கதை இடம்பெற்றுள்ளது. டயோனிசஸ் என்பவர் கிரேக்கப் புராணங்களில் மது, மகிழ்ச்சி, கொண்டாட்டம் மற்றும் நாடகக் கலையுடன் தொடர்புடைய கடவுளாகக் கருதப்படுகிறார். அரியட்னே கிரேக்கப் புராணங்களில் குறிப்பிடப்படும் இளவரசி ஆவார். இருவரின் காதல் மற்றும் திருமணத்தைச் சுற்றிய கதைகள் பழங்கால கிரேக்கக் கலைகளில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

இந்தக் கதையை மையமாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள், அந்தக் கால மக்களின் கலை ஆர்வத்தையும் புராணங்கள் மீதான ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, விருந்து அரங்கின் மேற்கூரையிலேயே இத்தகைய ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது, அங்கு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட அனுபவம் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. இத்தனை ஆண்டுகள் மண்ணுக்குள் புதைந்திருந்த ஓவியங்களை மீண்டும் பழைய வடிவத்துக்குக் கொண்டுவருவது சாதாரணமான வேலை அல்ல. காலப்போக்கில் மேற்கூரையின் பல பகுதிகள் சேதமடைந்ததால், ஓவியங்களின் சிறு சிறு துண்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றை ஒன்றிணைத்து அசல் வடிவத்தை மீண்டும் உருவாக்க தொல்லியல் நிபுணர்கள் புதிய முறையைக் கையாண்டுள்ளனர்.

இதற்காக வளைந்த வடிவிலான பிரத்யேகத் தாங்கு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கிடைத்த ஓவியத் துண்டுகள் அவற்றின் பழைய இடத்துக்கு ஏற்றவாறு பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் மேற்கூரையின் உண்மையான வளைவு வடிவத்தை மீண்டும் உருவாக்க முடிந்துள்ளது. இதுவரை அசல் மேற்கூரையின் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பகுதி மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அகழாய்வின்போது கூடுதல் ஓவியத் துண்டுகள் கிடைத்தால் அவற்றையும் இந்த அமைப்பில் இணைக்க முடியும். இந்தப் புதுப்பிக்கப்பட்ட மேற்கூரை 2026 ஜூலை மாதம் நடைபெற்ற சர்வதேச ஆய்வுக் கூட்டத்தின் நிறைவில் பொதுமக்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொல்லியல் கண்டுபிடிப்புகள் மற்றும் பழமையான கலைப் பொருட்களைப் பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பாம்பேய் தொல்லியல் பூங்காவின் 2026-ம் ஆண்டு ஆய்வுத் திட்டமும் டயோனிசஸ் கடவுளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஹவுஸ் ஆஃப் தியாசஸ் என்ற பகுதியில் டயோனிசஸ் கடவுளுடன் தொடர்புடைய பிரம்மாண்டமான சுவர் ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அந்தக் கடவுளுடன் தொடர்புடைய ஊர்வலக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்தப் புதிய ஆய்வுகளும் பழங்கால மக்களின் மத நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள் மற்றும் கலைப் பண்பாடு குறித்து பல தகவல்களை வெளிப்படுத்துகின்றன.

ஒரு காலத்தில் மக்கள் வாழ்ந்த வீடுகளும், அவர்கள் விருந்து கொண்டாடிய அரங்குகளும் இன்று வரலாற்றின் சாட்சிகளாக நிற்கின்றன. எரிமலை வெடிப்பால் அழிந்ததாகக் கருதப்பட்ட நகரத்தின் வாழ்க்கை முறையை, அங்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓவியமும் கட்டிடமும் மீண்டும் நமக்குக் காட்டுகின்றன. குறிப்பாக, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்களை இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீண்டும் உயிர்ப்பிப்பது தொல்லியல் உலகில் மிக முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.