நிலநடுக்கத்தால் நடுவானில் தடுமாறிய விமானம்... லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பரபரப்பு!

ஓடுபாதையை நெருங்கிய நேரத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றம், அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது...
California earthquake November 28 2026
California earthquake November 28 2026
Published on: 
Updated on: 
2 min read

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தையே (LAX) உலுக்கியுள்ளது. விமானம் ஒன்று ஓடுபாதையில் தரையிறங்குவதற்குச் சில நொடிகளே இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அவசரமாகத் தரையிறக்கத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து விமானி விமானத்தை மீண்டும் மேலே உயர்த்தி வேறு பாதையில் செலுத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த நவம்பர் 28-ம் தேதி, உள்ளூர் நேரப்படி காலை சுமார் 9.30 மணியளவில் தெற்கு கலிபோர்னியா கடற்கரைப் பகுதியில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு அமைப்பின் தகவலின்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகிலுள்ள மன்ஹாட்டன் கடற்கரைப் பகுதியில் இருந்து சுமார் 6 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த அதிர்வு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது. வீடுகள், அலுவலகங்கள் மட்டுமின்றி விமான நிலையத்திலும் அதன் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது.

அப்போது டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறங்குவதற்கான இறுதிக்கட்ட அணுகுமுறையில் இருந்தபோது, திடீரென நிலம் அதிரத் தொடங்கியது. விமான நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவும் அதிர்வால் குலுங்கியது. இதை உணர்ந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி, உடனடியாக விமானிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

“டெல்டா 1972, தரையிறக்கத்தை நிறுத்துங்கள், மீண்டும் மேலே செல்லுங்கள். இங்கு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது” எனக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து விமானி அந்த உத்தரவைப் பின்பற்றி, விமானத்தைத் தரையிறக்காமல் மீண்டும் வானில் உயர்த்தினார். பின்னர் மாற்றுப் பாதையில் சென்று மீண்டும் தரையிறங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். விமானம் ஓடுபாதையை நெருங்கிய நேரத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றம், அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலநடுக்கத்தின் தாக்கம் விமான நிலையக் கட்டடங்களிலும் காணப்பட்டது. அங்கிருந்த முனையப் பகுதியில் சில கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. கட்டடத்தின் உட்புறப் பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதுடன், சில இடங்களில் பொருட்களும் அசைந்ததாகக் காட்சிகள் வெளியாகின. இதனால் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்திற்குப் பின்னர் அப்பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வுகளும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கட்டடங்கள் மற்றும் விமான நிலையப் பகுதிகளில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் விமான நிலையத்தின் ஒட்டுமொத்த விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானம் தரையிறங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லை எனக் கருதப்படும் நேரங்களில், விமானிகள் தரையிறக்க முயற்சியை நிறுத்திவிட்டு மீண்டும் வானில் உயர்ந்து மற்றொரு முறை அணுகுவது 'கோ-அரவுண்ட்' (Go-Around) எனப்படுகிறது. விமானப் பாதுகாப்பில் இது வழக்கமான நடைமுறையாகும். இந்தச் சம்பவத்திலும் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் எச்சரிக்கையைப் பின்பற்றி விமானி சரியான நேரத்தில் முடிவெடுத்ததால், ஆபத்தான சூழல் தவிர்க்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட சில நொடிகளில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, விமானப் பாதுகாப்பில் விரைவான தகவல் பரிமாற்றமும் சரியான முடிவெடுப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.