கனடாவில் இந்தியர்களுக்கு இடியாய் வந்த செய்தி! அனைத்து விசாக்களும் ரத்து? - ஜஸ்டின் ட்ரூடோ அரசின் ரகசியத் திட்டம்!

இந்தத் திட்டத்தின் தாக்கமும் இந்தியர்கள் மீதே மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கனடாவில் இந்தியர்களுக்கு இடியாய் வந்த செய்தி! அனைத்து விசாக்களும் ரத்து? - ஜஸ்டின் ட்ரூடோ அரசின் ரகசியத் திட்டம்!
Published on
Updated on
1 min read

கனடாவில் குடியுரிமை, அகதி மற்றும் குடியேற்றத்திற்கான அமைப்பும் (Immigration, Refugees and Citizenship Canada - IRCC), கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அமைப்பும் (Canada Border Services Agency - CBSA) இணைந்து, நாடு முழுவதும் பாரிய அளவில் விசாக்களை ரத்து செய்யும் ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்த ஆயத்தமாகி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கையின் விளைவாக, பெருமளவிலான இந்தியர்கள் விசா ரத்து செய்யப்படுவதால் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் முக்கியக் காரணம், கனடாவுக்குள் நுழையப் பல வெளிநாட்டவர்கள் பயன்படுத்தும் விசா விண்ணப்பங்களில் நடக்கும் மோசடிகளையும் முறைகேடுகளையும் (Fraudulent Visa Applications) கண்டறிவதுதான். குறிப்பாக, சர்வதேச மாணவர்கள் கனடாவுக்கு வரும் வேகத்தைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து போலியான விசாக்களைக் கண்டறிந்து அவற்றை மொத்தமாக ரத்து செய்யக் கனடாவின் குடியேற்ற அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

விசா முறைகேடுகளைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதற்குச் சமீபத்தில் கனடா நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவு (Bill C-12) தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டால், அது குடியேற்ற அமைச்சகத்திற்கு (Minister of Immigration) மிகப் பெரிய அதிகாரத்தை வழங்கும். அதாவது, "பொது நலன்" (Public Interest) என்று கருதப்பட்டால், ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தற்காலிகக் குடியிருப்பாளர்கள், ஒர்க் பெர்மிட்ஸ் (Work Permits) மற்றும் மாணவர் விசாக்களை (Study Permits) கூட அமைச்சகம் மொத்தமாக ரத்து செய்யவோ, மாற்றி அமைக்கவோ அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ முடியும்.

கனடாவில் தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால் ஏற்பட்ட வீட்டுப் பற்றாக்குறை (Housing Shortages) மற்றும் பிற சமூக அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு இந்தக் கடுமையான முடிவுகள் எடுக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி, பெரிய அளவில் மோசடி செய்தவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் கனடாவுக்குள் நுழைவதைத் தடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த விசா ரத்துத் திட்டத்தால், கனடாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் அங்கு நிரந்தரமாகக் குடியேறக் காத்திருப்பவர்கள் மத்தியில் பெரிய அளவிலான அச்சமும் நிச்சயமற்ற தன்மையும் நிலவுகிறது. குறிப்பாக, சர்வதேச மாணவர்களில் மிகப்பெரிய அளவில் இந்தியர்கள் இருப்பதால், இந்தத் திட்டத்தின் தாக்கமும் இந்தியர்கள் மீதே மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முறைகேடான வழிகளில் கனடாவுக்குச் செல்ல முயன்றவர்கள் அல்லது மோசடிகளுக்குப் பலியானவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுவதால், கனடாவின் குடியேற்ற அமைப்பில் இது ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com