சொகுசு மற்றும் நவீனத் தொழில்நுட்பம் என்ற பெயரில் கார்களில் புகுத்தப்படும் சில அம்சங்கள், ஆபத்து காலங்களில் எமனாக மாறக்கூடும் என்பதற்குச் சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கை ஒரு சான்றாக அமைந்துள்ளது. டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி, இன்று உலகெங்கும் பரவியுள்ள "மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகள்" (Hidden or Flush Door Handles) முறைக்குச் சீனா 2027 முதல் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. கார்களின் வெளிப்புறத் தோற்றத்தை அழகாகவும், நவீனமாகவும் காட்டப் பயன்படுத்தப்படும் இந்தத் தொழில்நுட்பம், விபத்து நேரங்களில் பயணிகளின் உயிரைப் பறிக்கும் காரணியாக மாறியுள்ளதே இந்தத் தடைக்கு முக்கியக் காரணமாகும்.
மறைக்கப்பட்ட கைப்பிடிகள் என்றால் என்ன?
சாதாரண கார்களில் கைப்பிடிகள் வெளிப்புறமாகத் துருத்திக் கொண்டு இருக்கும், நாம் அதை இழுத்துத் திறக்கலாம். ஆனால், இந்த நவீன 'ஃப்ளஷ்' கைப்பிடிகள் காரின் கதவோடு சமமாகப் பொருந்தியிருக்கும். கார் சாவியுடன் அருகில் சென்றால் மட்டுமே சென்சார்கள் மூலம் இவை வெளியே வரும். எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தான் இந்த வடிவமைப்பை பிரபலப்படுத்தியது. இது காரின் வேகத்தைத் தடுக்கும் காற்றின் விசையைக் (Aerodynamics) குறைத்து, ஒருமுறை சார்ஜ் செய்தால் கார் கூடுதல் தூரம் (சுமார் 5-10 கி.மீ) ஓட உதவும் என்று சொல்லப்படுகிறது. ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் இது காருக்கு ஒரு எதிர்காலத் தோற்றத்தைத் தருவதாகக் குறிப்பிடுகின்றன.
உயிரைப் பறிக்கும் ஆபத்து: சீனா எடுத்த அதிரடி முடிவு
இந்தத் தொழில்நுட்பத்தில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், இது முழுமையாக மின்சாரத்தைச் சார்ந்து இயங்குகிறது. ஒருவேளை விபத்து ஏற்பட்டு காரின் பேட்டரி அல்லது மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டால், இந்தக் கைப்பிடிகள் வெளியே வராது. இதனால் விபத்தில் சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்களால் வெளியில் இருந்து கதவைத் திறந்து காப்பாற்ற முடிவதில்லை. 2024-ஆம் ஆண்டு சீனாவில் நடந்த ஒரு விபத்தில், ஹுவாய் ஆதரவு பெற்ற 'ஐட்டோ' (Aito) ரக காரின் கதவுகள் திறக்காததால், இரண்டு வயது குழந்தை உட்பட மூன்று பேர் காருக்குள்ளேயே சிக்கி உயிரிழந்தனர். மீட்புப் பணியாளர்கள் ஜன்னல்களை உடைத்துப் போராடியும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
சர்வதேச அளவில் எழும் புகார்கள்
இந்தச் சிக்கல் சீனாவிற்கு மட்டும் உரியதல்ல. அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் (NHTSA), டெஸ்லா கார்களின் கதவுகள் திறக்காதது குறித்து 140-க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்று விசாரணை நடத்தி வருகிறது. ஜன்னல்களை உடைத்துத் தான் குழந்தைகளை வெளியே எடுக்க வேண்டியிருந்தது என்று பல பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எலான் மஸ்க்கே 2013-இல், "இந்த ஃபேன்சியான கைப்பிடிகள் சில சமயம் சென்சார் கோளாறால் திறக்காமல் எரிச்சலூட்டுகின்றன" என்று ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
புதிய விதிகள் மற்றும் இந்தியாவின் நிலை
சீனாவின் புதிய விதிகளின்படி, இனி வரும் கார்களில் கதவுகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இருபுறமும் 'மெக்கானிக்கல்' முறையில் (மின்சாரம் இன்றி கையால் இயக்கும் வசதி) கதவைத் திறக்கும் வசதி கட்டாயம் இருக்க வேண்டும். சீனா உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி மற்றும் விற்பனை சந்தை என்பதால், இந்த முடிவு உலகளாவிய கார் வடிவமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் விற்கப்படும் டாடா சியரா, கர்வ், மஹிந்திரா XUV700, XEV 9e மற்றும் கியா செல்டோஸ் போன்ற பல பிரபலமான மாடல்களிலும் இத்தகைய 'ஃப்ளஷ்' கைப்பிடிகள் தற்போது இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.