சமீபத்தில் சீனா ஒரு புது வகை வெடிகுண்டை சோதனை செய்து உலகையே திரும்பிப் பார்க்க வைச்சிருக்கு. இது அணு ஆயுதமில்லை, ஆனா அதை விட பயங்கரமான விஷயங்களை செய்யக்கூடிய ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டு.
இந்த புது வெடிகுண்டு, மாக்னீசியம் ஹைட்ரைடு என்ற ஒரு வேதிப் பொருளை அடிப்படையா வச்சு வடிவமைக்கப்பட்டிருக்கு. இந்த மாக்னீசியம் ஹைட்ரைடு, ஒரு வெள்ளி நிற தூள் மாதிரி இருக்கும். இதோட சிறப்பு என்னன்னா, இதுல ஹைட்ரஜன் (hydrogen) மிக அடர்த்தியா சேமிக்கப்படுது. பொதுவா ஹைட்ரஜனை உயர் அழுத்த டேங்குகள்ல சேமிக்கறது கஷ்டமான விஷயம். ஆனா இந்த தூள், ஹைட்ரஜனை எளிதாகவும் பாதுகாப்பாகவும் வச்சிருக்க முடியுது.
இந்த வெடிகுண்டு வெடிக்கும்போது, மாக்னீசியம் ஹைட்ரைடு உள்ள ஹைட்ரஜனை வெளியிடுது. இந்த ஹைட்ரஜன், காற்றுல இருக்கிற ஆக்ஸிஜனோட சேர்ந்து ஒரு பயங்கரமான தீப்பந்தத்தை உருவாக்குது. இந்த தீ, ஆயிரம் டிகிரி செல்சியஸுக்கு மேல வெப்பத்தை உருவாக்கி, சாதாரண டி.என்.டி வெடிகுண்டை விட 15 மடங்கு நேரம் எரியுது. ஒரு சோதனையில, 2 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டு, இரண்டு வினாடிகள் தொடர்ந்து எரிஞ்சிருக்கு. இது சாதாரண வெடிகுண்டுகளோட ஒப்பிடும்போது மிகப் பெரிய வித்தியாசம்.
முக்கியமா, இந்த வெடிகுண்டு, பழைய வெடிகுண்டுகள் மாதிரி காற்றை மாசுபடுத்தற நைட்ரஜன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு மாதிரியான விஷப் பொருள்களை உருவாக்கல. இதோட முக்கிய வெளியீடு தண்ணீரும் (H₂O) கார்பன் டை ஆக்ஸைடும் (CO₂) மட்டுமே. இதனால இதை “பசுமை வெடிகுண்டு”னு கூட சிலர் அழைக்கறாங்க. ஆனா இது இராணுவத்துக்கு எப்படி பயன்படுதுன்னு பார்க்கும்போது, இதோட அழிவு ஆற்றல் உங்களை திகைக்க வைக்கும்.
இராணுவத்துக்கு எப்படி பயன்படும்?
இந்த வெடிகுண்டு, அதோட உயர் வெப்பநிலையும், நீண்ட நேரம் எரியற திறனாலும், இராணுவத்துக்கு பல விதங்கள்ல பயன்படுது. இதோட பயங்கரமான வெப்பம், எதிரிகளோட உள்கட்டமைப்புகளை, ஆயுதக் கிடங்குகளை, அல்லது இராணுவ தளங்களை எளிதாக அழிக்க முடியும்.
குறிப்பா, இந்த வெடிகுண்டு நீருக்கடியில் பயன்படுத்தறதுக்கு மிகவும் உகந்ததா இருக்கு. நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கவோ, துறைமுகங்களை செயலிழக்க வைக்கவோ, அல்லது கடற்படை உள்கட்டமைப்புகளை தாக்கவோ இது பயன்படலாம். சீனாவோட CSSC 705 ஆராய்ச்சி மையம், கப்பல் கட்டுதல் மற்றும் கடற்படை தொழில்நுட்பத்துல நிபுணத்துவம் பெற்றது. அதனால இந்த வெடிகுண்டு, சீனாவோட கடற்படை ஆற்றலை வலுப்படுத்தறதுக்கு முக்கியமான ஒரு கருவியா பார்க்கப்படுது.
இப்போ உலக அரசியல் களத்துல சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில பதற்றம் அதிகமா இருக்கு. தென் சீனக் கடல், தைவான், வணிகத் தடைகள் மாதிரியான பிரச்சினைகளால இந்த பதற்றம் இன்னும் உச்சத்துல இருக்கு. இந்த நேரத்துல இந்த வெடிகுண்டு, அமெரிக்காவோட நீர்மூழ்கிக் கப்பல்களையோ, கடற்படை தளங்களையோ இலக்காக்கறதுக்கு பயன்படுத்தப்படலாம்னு சில அரசியல் ஆய்வாளர்கள் கருதறாங்க.
சட்டரீதியான பிரச்சினைகள்
இந்த வெடிகுண்டு ஒரு அணு ஆயுதமில்லை. அதனால, இப்போ இருக்கிற சர்வதேச ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களுக்கு இது உட்படாது. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தற ஒப்பந்தங்கள், யுரேனியம், புளுடோனியம் மாதிரியான பொருள்களை அடிப்படையா வச்சு உருவாக்கப்பட்டவை. ஆனா இந்த வெடிகுண்டு, மாக்னீசியம் ஹைட்ரைடு மாதிரியான ஒரு புது பொருளைப் பயன்படுத்தறதால, இதுக்கு எதிரா எந்த சட்டமும் இல்லை. இதனால, சீனா இந்த ஆயுதத்தை உருவாக்கி பயன்படுத்தறதுக்கு எந்த சர்வதேச தடையையும் எதிர்க்க வேண்டியதில்லை.
இது உலக நாடுகளுக்கு ஒரு பெரிய கவலையை உருவாக்கியிருக்கு. இந்த வெடிகுண்டு, பாரம்பரிய வெடிகுண்டுகளை விட பல மடங்கு அழிவு ஆற்றல் கொண்டது. ஆனா இதுக்கு எதிரா எந்த கட்டுப்பாடும் இல்லைன்னு சொன்னா, மற்ற நாடுகளும் இதே மாதிரி ஆயுதங்களை உருவாக்க ஆரம்பிக்கலாம். இது ஒரு புது ஆயுதப் போருக்கு வழி வகுக்கலாம். இதனால, இந்த வெடிகுண்டுக்கு எதிரா புது சர்வதேச ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கு.
ஆற்றல் துறையிலும் ஒரு புரட்சி?
இந்த வெடிகுண்டு இராணுவத்துக்கு மட்டுமல்ல, ஆற்றல் துறையிலும் பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம். மாக்னீசியம் ஹைட்ரைடு, ஹைட்ரஜனை அடர்த்தியா சேமிக்கறதால, இதை ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் (fuel cells) உருவாக்கறதுக்கு பயன்படுத்தலாம். இது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை சேமிக்கறதுக்கு ஒரு புது வழியை கொடுக்கலாம். உதாரணமா, சூரிய ஒளி, காற்றாலய ஆற்றலை ஹைட்ரஜனா மாற்றி, இந்த தொழில்நுட்பத்தை வச்சு சேமிக்க முடியும். இது உலகளாவிய ஆற்றல் நெருக்கடிக்கு ஒரு தீர்வா இருக்கலாம். ஆனா, இந்த தொழில்நுட்பத்தை அழிப்பதற்க்கு பயன்படுத்துவது பேராபத்து!.
சீனாவோட இந்த புது வெடிகுண்டு, உலக இராணுவ மற்றும் ஆற்றல் துறைகள்ல ஒரு புது அத்தியாயத்தை தொடங்கியிருக்கு. இதோட திறன், மற்ற நாடுகளை இதே மாதிரி தொழில்நுட்பங்களை உருவாக்க தூண்டலாம். இதோட ஆற்றல் துறை பயன்பாடுகள், பசுமை ஆற்றல் முயற்சிகளுக்கு ஒரு புது வாய்ப்பை கொடுக்கலாம்.
ஆனா, இந்த வெடிகுண்டோட சட்டரீதியான நிலை பத்தி உடனடியா சர்வதேச விவாதங்கள் நடக்கணும். இதுக்கு எதிரா புது ஒப்பந்தங்கள் உருவாக்கப்படலைன்னா, இது உலக பாதுகாப்புக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலா மாறலாம். சீனாவோட இந்த முன்னேற்றம், உலக நாடுகளை, தங்களோட இராணுவ மற்றும் ஆற்றல் உத்திகளை மறு ஆய்வு செய்ய நிர்பந்திக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்