

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 18, 2026 அன்று குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-காலித் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவுடன் மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் பதட்டமான சூழ்நிலைகளை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார். மேலும், ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதே முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் அலுவலகத்தின் தகவல்படி, இரு தலைவர்களும் மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலையை ஆய்வு செய்ததுடன், பிராந்திய பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்று கூறப்படுகிறது. அவர்களது, தொலைபேசி உரையாடலில், பிராந்திய அமைதி மற்றும் நீடித்த இராஜதந்திர ஈடுபாடு ஆகியவை இன்றியமையாதது என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டு பேசினர். "குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-காலேத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவுடன் உரையாடி, வரவிருக்கும் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழல் குறித்து நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம், மேலும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த கவலைகளையும் பகிர்ந்து கொண்டோம்," என்று பிரதமர் நரேந்திர மோடி தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் தொடங்கியதிலிருந்து, ஷேக் சபாவுக்கும் மோடிக்கும் இடையே நடந்த இரண்டாவது தொலைபேசி உரையாடல் இதுவாகும். மோடி சமீப நாட்களில் பல அரபு நாடுகளின் தலைவர்களுடன் பேசியுள்ளார்; இதுமட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் இதில் அடங்குவார். மேலும், குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதாக பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஹார்மோஸ் நீர்சந்தி வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை பிரதமரும் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் ஒப்புக்கொண்டனர். பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றை விரைவில் மீட்டெடுப்பதற்காக இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், பிரதமர் இதுவரை பஹ்ரைன் மன்னர் மற்றும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-காலேத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபா ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் நலனினை குறித்து கேட்டதோடு, மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலின் போது பிற நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.