"சர்வதேச உதவிகளை நிராகரிக்கும் நேபாளம்!" பேரழிவு வெள்ளத்திலும் அதிர்ச்சி முடிவு - காரணம் இதுதானா?

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, திடீர் வெள்ளப்பெருக்கில் சுமார் 1003 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளன.
Nepal flood disaster
Nepal flood disaster
Published on
Updated on
4 min read

தற்போதைய நேபாள அரசாங்கம், நாட்டையே தலைகீழாக மாற்றிய பேரழிவை உண்டாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பிறகான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைக் கையாளும் திறன் தங்களிடம் இருப்பதாகக் தெரிவித்துள்ளது.

நேபாளத்திற்கு உதவுவதற்காக உதவிக்கரம் நீட்டிய பல நாடுகளின் முன்மொழிவுகளை நிராகரித்து, உள்நாட்டு அதிகாரப் பகிர்வு முறையைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதாவது, ஒரு நாட்டின் மத்திய அரசாங்கம் தன்னுடைய சில அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களைச் சட்டத்தின் மூலம் மாநில, பிராந்திய அல்லது உள்ளாட்சி அமைப்புகள் போன்ற சிறிய நிர்வாகப் பிரிவுகளுக்கு மாற்றிக் கொடுக்கும் ஒரு அரசியல் நடைமுறையாகும். இதைத்தான் நேபாளம் தேர்ந்தெடுத்துள்ளது.

இது அதன் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்க ஏற்பட்டதன் அனுபவத்தின் அடிப்படையில் வந்துள்ளது எனலாம். பேரழிவை ஏற்படுத்தியபோதே, கோசி வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, வெளிநாட்டுத் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக பல்வேறு நாடுகள் விடுத்த அழைப்புகளை நேபாளம் நிராகரித்துள்ளதாக நேபாள ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

"தேசிய பேரிடர் நிவாரணப் படை (NDRF) பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை அனுப்பத் தாங்கள் குறிப்பாக முன்வந்துள்ளதாகவும், காத்மாண்டுவின் பதிலுக்காக இன்னும் காத்திருப்பதாகவும்" இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை அன்று கூறியது. சுரங்கப்பாதை மீட்புக் குழு, மருத்துவக் குழு மற்றும் அவசர காலங்களிலும், ராணுவ தேவைகளிலும், போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளிலும் விரைவாக அமைக்கப்படக்கூடிய தற்காலிக அல்லது நிரந்தர பாலங்களான பெய்லி பாலங்கள் உள்ளிட்ட இந்தியாவின் பிற சிறப்பு உதவிகளை நேபாளம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளம், அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதிப் பங்களிப்புகள் போன்றவற்றின் வடிவிலான வெளிநாட்டு உதவிகளை ஏற்றுக்கொண்டாலும், வெளிநாடுகளின் தேடுதல் மற்றும் மீட்பு உதவிகளுக்கான சலுகைகளை நிராகரித்துள்ளது. காத்மாண்டுவின் இந்த முடிவின் பின்னால், கடந்த காலத்திலிருந்து ஒரு பாடம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?.

வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கு எதிரான நேபாளத்தின் கொள்கைக்கும், குறிப்பிட்ட நடவடிக்கைகளை மட்டும் காத்மாண்டு ஏற்றுக்கொள்ளும் உதவிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. "தொடர்ந்து நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவக்கூடிய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்களையும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களையும் அனுப்புவதற்கான ஒரு குறிப்பிட்ட முன்மொழிவையும் நாங்கள் நேபாள அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளோம். நேபாளத்திடமிருந்து பதிலுக்காகக் காத்திருக்கிறோம்," என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்திருந்தார்.

இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான், தென் கொரியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாகவோ அல்லது முறைசாராமலோ தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை வழங்கி உதவி கரம் நீட்ட நேபாள நாட்டிற்கு முன்வந்தன. சர்வதேச அமைப்புகளும் காத்மாண்டுவை அணுகிய நிலையில், சில அரசாங்கங்கள் பேரிடர் மண்டலங்களில் செயல்படப் பயிற்சி பெற்ற ஹெலிகாப்டர்களையும் பணியாளர்களையும் வழங்க முன்வந்தன என்று காத்மாண்டுவைச் சேர்ந்த 'தி காத்மாண்டு போஸ்ட்' உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, திடீர் வெள்ளப்பெருக்கில் சுமார் 1003 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளன. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளனர் அல்லது தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. கைலாஷ் மானசரோவர் மற்றும் கோசைன்குண்டாவிற்குப் பயணம் செய்த இந்தியர்கள் உட்பட நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர், கணக்கில் வராதவர்களில் அடங்கியுள்ளன.

320 இந்தியக் குடிமக்களையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 100 பேரையும் இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 85 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், திபெத்தியப் பகுதியில் இருந்த ஏறத்தாழ 400 இந்தியர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையைத் தொடர்ந்து, இந்தியா ஆரம்பத்தில் 10 டன் மனிதாபிமான உதவிகளை அனுப்பியது . அதனைத் தொடர்ந்து, ஒரு இராணுவப் போக்குவரத்து விமானம் மூலம் மேலும் 37.5 டன் பொருட்களை அனுப்பியது. சி-130ஜே மற்றும் சி-17 விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொருட்களில் தற்காலிக தங்குமிடங்கள், போர்வைகள், சுகாதாரப் பெட்டிகள், சூரிய ஒளி விளக்குகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்றவையும் அடங்கும். மேலும், நிறைய சிறிய மற்றும் பெரிய பாலங்கள் சேதமடைந்துள்ள பகுதிகளுக்கு, புது தில்லி பெயிலி மற்றும் முன் தயாரிக்கப்பட்ட டிரஸ்ட் பாலங்களையும் வழங்கியுள்ளது. 2015-ல் நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ​​இந்தியா முதலில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியா நகர்த்தக்கூடிய பெய்லி பாலங்களை தற்போது அனுப்பியுள்ளது. மேலும், திரிசூலி 3A நீர்மின் திட்டத்தில் இரண்டு நாட்களாக சிக்கியிருப்பதாக நம்பப்படும் சுமார் 100 பேரைச் சென்றடைய உதவுவதற்காக, இந்தியா ஒரு மருத்துவக் குழுவையும், ஒரு சிறப்புச் சுரங்க மீட்புக் குழுவையும் தற்போது அனுப்பி வருகிறது.

அப்படியென்றால், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான உதவியையும் காத்மாண்டு ஏன் நிராகரித்துள்ளது?. தங்கள் குழுக்களை அனுப்புவதற்கு அனுமதி கோரி, நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து அரசாங்கத்திற்கு பல அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற கோரிக்கைகள் வந்துள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் 'தி காத்மண்டு போஸ்ட்' பத்திரிகையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், "இந்த நடவடிக்கையைக் கையாளும் திறன் நேபாளத்தின் சொந்த பாதுகாப்பு முகமைகளுக்கே உள்ளது" என்று அரசாங்கம் அவர்களிடம் கூறியுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

'தி காத்மாண்டு போஸ்ட் பத்திரிகை' மேற்கோள் காட்டியுள்ளபடி, மூத்த வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், 2015 ஏப்ரல் மாத நிலநடுக்கத்திற்குப் பிறகு நேபாளம் பெற்ற அனுபவமே இந்த முடிவுக்கு மையமாக இருந்தது என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து மீட்புக் குழுக்கள், இராணுவ விமானங்கள் மற்றும் நிவாரண அமைப்புகள் போன்றவை நேபாளம் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போயிருந்தபோது வந்து சேர்ந்தன. இது நேபாளத்தின் அவசரகாலத் திறனை விரிவுபடுத்திய அதே வேளையில், இந்தத் திடீர் வருகை கடுமையான தளவாட மற்றும் நிர்வாக அழுத்தத்தையும் உருவாக்கியுள்ளது .

விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்புகள் ஏற்கனவே நெருக்கடியில் இருந்த நேரத்தில், வெளிநாட்டுக் குழுக்களிடையே நிலவிய போட்டியும், அவர்களின் நடமாட்டத்தை ஒருங்கிணைப்பதில் இருந்த சிரமங்களும் நிர்வாகத்தை மேலும் சிக்கலாக்கியதாக நேபாள அதிகாரிகள் 'தி போஸ்ட்' பத்திரிகையிடம் தெரிவித்துள்ளனர்.

சுயாதீனமாகச் செயல்படும் வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கு இடமளிப்பதற்குப் பதிலாக, ஒரு தெளிவான நேபாள அதிகாரப் படிநிலையைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம், அதுபோன்ற ஒரு இக்கட்டான நிலை மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கவே காத்மாண்டு இப்போது விரும்புவதாக கூறப்படுகிறது. பொதுவான வெளிநாட்டுத் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்புவதை நேபாளம் நிராகரித்துள்ளதாகவும், ஆனால் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்கான பொருட்கள், உபகரணங்கள் மற்றும் உதவிகளை ஏற்றுக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா, நேபாளத்திற்கு "பல்வேறு ஆதரவு சலுகைகளை" வழங்கியுள்ளதாகவும், அவற்றில் எதை பொருத்தமானது என்று காத்மாண்டு கருதுகிறதோ? அதைத் தேர்ந்தெடுக்கும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதி மூலம் மட்டுமே நிதி உதவியை நாடுமாறு நேபாளம் தனது வெளிநாட்டுத் தூதரகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த "ஒற்றை வழி அமைப்பு" (அதாவது ஒரு வழிப்பாதை உதவி) பங்களிப்புகளை மையப்படுத்துவதையும், இரட்டிப்பாவதைத் தவிர்ப்பதையும், மேலும் எங்கு உதவிகள் மிகவும் அவசரமாகத் தேவைப்படுகின்றன என்பதை அரசாங்கம் தீர்மானிக்க அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

புனரமைப்புப் பணிகளின் போது மேலும் நிதி மற்றும் பொருள் ஆதரவைக் கோர காத்மாண்டு எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் உலக வங்கி ஆகியவை ஏற்கனவே உதவியை அறிவித்துள்ள நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கியானது அவசரநிலைக்கு அப்பாற்பட்டு இடர் மதிப்பீடு, முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் மீள்திறன் கொண்ட உள்கட்டமைப்பு (இயற்கை பேரிடர்கள், காலநிலை மாற்றம், விபத்துகள் அல்லது மனிதர்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தாங்கி நின்று, தொடர்ந்து செயல்படும் திறன் கொண்ட கட்டமைப்பு வசதிகளைக் குறிக்கிறது) வரையிலான ஆதரவை வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒருங்கிணைப்பதற்காக, நேபாள வெளியுறவு அமைச்சகம் ஒரு அவசரகால மீட்புக் குழுவையும் (ERT) அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. புதன்கிழமை முதல் 34 நாடுகளைச் சேர்ந்த 668 சுற்றுலாப் பயணிகள் தொடர்பில்லாமல் இருப்பதாக, நேபாள சுற்றுலாத் துறை கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது. புது தில்லியின் தகவல்படி, நேபாளத்தில் குறைந்தது 290 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர் அல்லது தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. "வெள்ளச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட, காணாமல் போன அல்லது அது தொடர்பாக வேறு விதங்களில் தொடர்புடைய வெளிநாட்டினரைத் தேடுதல், மீட்பு, தகவல் சரிபார்ப்பு மற்றும் தூதரக உதவி ஆகியவற்றை எளிதாக்குவதற்காக, அமைச்சகத்திற்குள் உள்ள மத்திய ஒருங்கிணைப்பு அமைப்பாக ERT செயல்படும்" என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய வெள்ள நெருக்கடிக்கு மத்தியில் நேபாளத்திற்குத் தேவையான உதவிகளை இந்தியா வழங்கி வரும் வேளையில், பேரிடர் காலங்களில் தனது அண்டை நாடுகளுக்கு உதவுவதில் புது தில்லி நீண்ட காலமாகவே முன்னணியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2015 ஏப்ரலில் நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, இந்தியா தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் முதன்மையான ஒன்றாக ஈடுபட்டது. 'ஆபரேஷன் மைத்ரி' என்ற திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் நிவாரணப் பொருட்களை விநியோகித்தன, சிக்கிக்கொண்ட மக்களை வெளியேற்றின, இதுமட்டுமின்றி நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் பணிகளை மேற்கொண்டன. இந்தியா, தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள், மருத்துவப் பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் மோப்ப நாய்களையும் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com