"வெப்ப அலை காரணமாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்!" நவம்பரில் காத்திருக்கிறதா பேரழிவு? 'எச்சரிக்கும் வானிலை ஆராய்ச்சியாளர்கள்'

வெப்பமடைந்து வரும் உலகின் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போலாகும் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
WMO climate warning
WMO climate warningWMO climate warning
Published on
Updated on
2 min read

ஜெனீவா, சுவிட்சர்லாந்து (WMO) வெப்பமண்டல பசிபிக் பகுதியில் நிலவும் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான கடல் நீரால் எல் நினோ நிலைமைகள் உருவாகி வருவதாகவும், அவை உலகளாவிய வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, வரும் மாதங்களில் தீவிர வானிலை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.

கடந்த சில காலங்களாக இந்த எல் நினோ/லா நினோ போன்றவற்றை கேட்டு வருகிறோம். அப்படி என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

எல் நினோ: எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அசாதாரணமான வெப்பமடைவது எல் நினோ என அழைக்கப்படுகிறது.

லா நினா: லா நினா எனப்படுவது எல் நினோவுக்கு நேர்மாறான குளிர்ந்த நிலையாகும். பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் இயல்பை விட குளிர்ச்சியாக இருக்கும். இவை முக்கியமா? என கேட்டால், ஆம்! முக்கியம்தான். ஏனெனில் எல் நினோ மற்றும் லா நினோ ஆகியவை இணைந்து ஒரு இயற்கைச் சுழற்சியின் பகுதியாக உள்ளன. இவை உலகளாவிய வானிலை, காலநிலை, மற்றும் கடல் நிலைமைகள் மட்டுமின்றி, உணவு உற்பத்தி, மனித ஆரோக்கியம், மற்றும் நீர் விநியோகம் ஆகியவற்றையும் கணிசமாகப் பாதிக்கக்கூடும் என்பதால் இது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

உலக வானிலை அமைப்பின் (WMO) புதிய எல் நினோ/லா நினோ அறிக்கை, 2026 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஒரு எல் நினோ நிகழ்வு ஏற்படுவதற்கு 80% சாத்தியக்கூறு இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இது குறைந்தபட்சம் நவம்பர் மாதம் வரை தொடர்வதற்கான நிகழ்தகவுகள் 90% அல்லது அதற்கு அதிகமாகவோ உள்ளன. வரும் மாதங்களில் எல் நினோ 90% உறுதியுடன் நம்மை வந்தடையும். உலகம் இதை ஒரு அவசர காலநிலை எச்சரிக்கையாகக் கருத வேண்டும். எல் நினோவின் நிலைமைகள், வெப்பமடைந்து வரும் உலகின் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போலாகும் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். அதேபோல் சில பகுதிகளில் கடுமையான மழை பொழிவும், வேறு சில பகுதிகளில் கடுமையான வறட்சியும் ஏற்படும் என ஐ.நா எச்சரித்துள்ளது.

எல் நினோ, இதன் விளைவாக, 2023-ம் ஆண்டு வரலாற்றிலேயே இரண்டாவது வெப்பமான ஆண்டாக அமைந்ததுடன், 2024-ம் ஆண்டில் வெப்பநிலை, 1850-1900-ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய தொழில்மயமாக்கலுக்கு முந்தைய சராசரியை விட சுமார் 1.55°C அதிகரித்து, வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. தற்போது இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்த வண்ணமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவில் வெப்ப அலை காரணமாக இறப்புகள் நிகழ்ந்தவண்ணமே உள்ளது. அதன் அடிப்படையில்,இந்தியா முழுவதும் ஒரே ஒரு நாள் நிலவும் கடும் வெப்பத்தால் சுமார் 3,400 கூடுதல் இறப்புகள் ஏற்படுவதாகவும், அதே சமயம் ஐந்து நாள் வெப்ப அலை கிட்டத்தட்ட 30,000 இறப்புகளை ஏற்படுத்துவதாகவும் ஓர் ஆய்வு மதிப்பிட்டுள்ளது. ஆகவே வரும் காலங்களில் இந்த எல் நினோ/லா நினா போன்றவற்றின் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்று ஆய்வாளர்களும், ஐ.நா-வும் எச்சரித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com