

பன்றியிடமிருந்து பொருத்தப்பட்ட சிறுநீரகம் ஒன்று, ஒரு நோயாளியின் உடலில் 271 நாட்கள் செயல்பட்டுள்ளது இதுவே இதுவரை இல்லாத மிக நீண்ட காலமாகும் என அமெரிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர். 'வில்மா' என்ற பன்றியிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாற்றப்பட்ட சீறுநீரகமானது, சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 66 வயது முதியவரை காப்பாற்றியது மட்டுமின்றி, அவரை ஒன்பது மாதங்கள் உயிருடன் வைத்திருப்பதுடன், உலகில் முதல் முறையாக மனித மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு வெற்றிகரமான 'பாலமாகவும்' செயல்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து கூறிய டிம் ஆண்ட்ரூஸ், இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தனக்கு 'நம்பிக்கையை' அளித்ததாகவும், டயாலிசிஸ் இயந்திரம் மூலம் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் நிலையில் இருந்து மாதக்கணக்கில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையிலிருந்து தன்னைக் காப்பாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டிம் ஆண்ட்ரூஸ், நீரிழிவு - வகை 2 நோயால் ஏற்பட்ட இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். மேலும், அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் மனித சிறுநீரகம் கிடைப்பதற்கான வாய்ப்பு என்பது 9% மட்டுமே இருந்துள்ளது. மாறாக, அவர் இறப்பதற்கோ அல்லது காத்திருப்போர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதற்கோ 40%க்கும் அதிகமான ஆபத்தான வாய்ப்பு இருந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆண்ட்ரூஸ் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும், ஆனால் டயாலிசிஸ் சிகிச்சையில் மக்கள் சராசரியாக ஐந்து ஆண்டுகள் மட்டுமே வாழ்கிறார்கள் என்றும் அவரிடம் கூறப்பட்டது. அந்த சமயத்தில்தான் அறிவியல் உலகில் ஒரு அதிசயம் நடந்தது. அப்போதுதான் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தலாம் என்ற யோசனை மருத்துவர்களுக்கு தோன்றியுள்ளது. இந்த யோசனையானது மருத்துவ உலகத்தில் பல வருடங்களாக ஆய்வில் இருக்கும் ஒரு சோதனைதானே தவிர அது ஒரு புதிய விஷயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆனால், சாதாரணமாக ஒரு பண்ணைக்குச் சென்று, பன்றியிடமிருந்து ஒரு சிறுநீரகத்தை எடுத்து அதை ஒரு மனிதருக்குப் பொருத்த முடியாது. அவ்வாறு பொருத்தினால் மனித உடல் உடனடியாக அந்த உறுப்பை அந்நியப் பொருளாக அடையாளம் கண்டு, சிறுநீரகத்தை அழிக்கும் ஒரு கடுமையான நோயெதிர்ப்புத் தாக்குதலைத் தொடங்கிவிடும். ஒவ்வொரு செல்லிலும் துளைகள் கிழிக்கப்பட்டு, உள்ளிருந்தே இரத்தம் உறைந்து போவதால், அது சில நிமிடங்களிலேயே கருப்பாக மாறிவிடும். உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.
அப்போதுதான், ஆராய்ச்சியாளர்கள் யுகடான் குட்டிப் பன்றிகளின் உறுப்புகளை 'மனிதமயமாக்குவதற்காக' 69 மரபணு மாற்றங்களை உருவாக்கியுள்ளனர். 'லான்செட் மருத்துவ இதழில்' சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் உடனடியாகச் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையானது, 2025-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி அவருக்கு அயல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்போது அவருக்கு 66 வயது. ஆண்ட்ரூஸுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் செயலிழக்கத் தொடங்கும் வரை, அவர் ஒன்பது மாதங்களுக்கு டயாலிசிஸ் செய்யாமல் இருந்துள்ளார். இந்த நிகழ்வானது இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக நீண்ட காலம் என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. அந்த சிறுநீரகம் செயலிழந்த பின்னர் ஆண்ட்ரூஸுக்கு, இறந்த ஒரு மனிதரிடமிருந்து ஒரு சிறுநீரகம் வெற்றிகரமாக பொறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு கொடையாளரிடமிருந்து சிறுநீரகம் கிடைக்கும் வரை, டிம்முக்கு 82 நாட்களுக்கு டயாலிசிஸ் தேவைப்பட்டதாக மருத்துவர்ட்கள் கூறியுள்ளனர். மேலும், தற்போது பொருத்தப்பட்டுள்ள அந்த சிறுநீரகமானது நன்றாகச் செயல்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக லான்செட் மருத்துவ இதழில் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்