அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் படைத்த மாபெரும் உலக சாதனை! 37 ஆண்டுகளில் 31 முறை வென்று அதிரடி!

அதிவேகமாகச் சரியான ஸ்பெல்லிங்கைச் சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையில், ஸ்ரே பரிக் 32 வார்த்தைகளுக்குச்
Shrey Parikh
Published on
Updated on
2 min read

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள டிஏஆர் கான்ஸ்டிடியூஷன் ஹாலில் விறுவிறுப்பாக நடந்த 2026-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற 'ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ' (Scripps National Spelling Bee) போட்டியில், கலிபோர்னியாவைச் சேர்ந்த 14 வயது இந்திய வம்சாவளி சிறுவன் ஸ்ரே பரிக் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதி கட்டத்தில் நடந்த மிகக் கடுமையான 'ஸ்பெல்-ஆஃப்' (Spell-off) சுற்றில், கடைசி இரண்டு போட்டியாளர்களுக்கும் தலா 90 வினாடிகள் அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள் கேட்கப்படும் வார்த்தைகளுக்கு மிக அதிவேகமாகச் சரியான ஸ்பெல்லிங்கைச் சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையில், ஸ்ரே பரிக் 32 வார்த்தைகளுக்குச் சரியாக ஸ்பெல்லிங் கூறி அசத்தினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்றொரு இந்திய வம்சாவளி சிறுவனான இஷான் குப்தா 25 வார்த்தைகளுக்கு மட்டுமே சரியாக ஸ்பெல்லிங் கூறி ரன்னர் அப் இடத்தை பிடித்தார்.

ஸ்கிரிப்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரே பரிக், பரிசாக 52,500 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 70 லட்சம் ரூபாய்) ரொக்கப் பணத்தைக் வீட்டிற்கு எடுத்துச் செல்ல உள்ளார். இத்துடன், உலகப் புகழ்பெற்ற என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா மற்றும் மெரியம்-வெப்ஸ்டர் நிறுவனங்களின் மதிப்புமிக்க புத்தகங்கள், ஒரு சிறப்பு டிராபி, நினைவுப் பதக்கம் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பயணம் செய்ய 1,000 பவுண்டுகள் (சுமார் 1.28 லட்சம் ரூபாய்) மதிப்புள்ள இலவச விமான டிக்கெட் கிரெடிட்டுகளும் அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

கலிபோர்னியாவின் ரான்சோ குகாமுங்கா பகுதியில் உள்ள டே க்ரீக் இன்டர்மீடியட் பள்ளியில் படித்து வரும் 14 வயது ஸ்ரே பரிக், டென்னிஸ் விளையாடுவது, புத்தகங்கள் வாசிப்பது, கணிதம் மற்றும் செஸ் விளையாடுவதைத் தனது ஹாபியாகக் கொண்டுள்ளார். மேலும், அவர் தனது பள்ளி இசைக்குழுவில் ஒரு சிறந்த டிரம்ஸ் வாசிப்பாளராகவும் இருக்கிறார். ஸ்ரே பரிக் இந்த ஸ்பெல்லிங் பீ போட்டிக்கு வருவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன்பு கடந்த 2022-ஆம் ஆண்டில் நடந்த போட்டியில் 89-ஆவது இடத்தைப் பிடித்த அவர், 2024-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, இந்த முறை போட்டிக்கு வரும்போதே அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு ஃபேவரிட் போட்டியாளராக ஸ்ரே பரிக் வந்ததால், அவர் மீது ஒரு லேசான பிரஷர் இருந்தது. ஆனாலும், தனக்குத் தெரிந்த வார்த்தைகள் கேட்கப்படும் போதெல்லாம் அவருடைய அசாத்திய தன்னம்பிக்கை வெளிப்பட்டது. ஆன்லைனில் நடந்த பல்வேறு கடுமையான ஸ்பெல்லிங் போட்டிகளிலும், வாஷிங்டனில் தற்பொழுது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பல வீரர்களை வீழ்த்தி அவர் ஏற்கனவே பலமுறை ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.

ஸ்ரே பரிக் பெற்றுள்ள இந்த வெற்றியானது, கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த போட்டியில் இந்திய வம்சாவளியினர் காட்டி வரும் அசுர ஆதிக்கத்தின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. புள்ளிவிபரங்களின்படி, கடந்த 37 ஆண்டுகளில் மட்டும் இந்த மதிப்புமிக்க சாம்பியன் கோப்பையை இந்திய-அமெரிக்க சமூகத்தினர் மொத்தம் 31 முறை வென்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக 2019-ஆம் ஆண்டு நடந்த போட்டியில், வரலாறு காணாத வகையில் 8 பேர் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர், அதில் 6 பேர் இந்திய வம்சாவளி குடியேற்றக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் என்பது ஒட்டுமொத்த அமெரிக்காவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்திய அமெரிக்க சமூகத்தினரின் கல்வி மற்றும் கலாச்சாரப் பின்னணியே இந்த தொடர் வெற்றிக்குக் காரணம் என்று நிபுணர்கள் விளக்குகிறார்கள்.

இந்த ஆண்டு நடந்த போட்டியில் அமெரிக்காவின் 50 மாநிலங்கள், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா, 3 அமெரிக்க யூனியன் பிரதேசங்கள் மற்றும் பஹாமாஸ், கனடா, கானா, நைஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 5 வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 247 திறமையான மாணவர்கள் பங்கேற்றனர். ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்த போட்டி மீண்டும் தலைநகரான வாஷிங்டன் டிசிக்குத் திரும்பியிருந்ததால், இந்த முறை ஸ்ரே பரிக் சாம்பியன் பட்டம் வென்றது மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன், கல்வி சார்ந்த போட்டிகள் மீது அமெரிக்கர்களுக்கு இருக்கும் ஈர்ப்பை இந்த போட்டி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com