வைபவ் சூர்யவன்ஷியிடம் செல்ஃபி கேட்ட லக்னோ கோச் ஜஸ்டின் லாங்கர்!

15 வயது சிறுவனிடம் ஜஸ்டின் லாங்கர் நேரில் சென்று தனுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்
 Justin Langer and Vaibhav Suryavanshi selfie
Published on
Updated on
2 min read

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் கிரிக்கெட் வீரன் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் தற்பொழுது உலக நாடுகளைக் கடந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் இந்த சிறுவன் குறித்து ஒரு நெகிழ்ச்சியான உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். சூர்யவன்ஷியின் ராஜஸ்தான் அணிக்கும், லாங்கர் பயிற்சியளிக்கும் லக்னோ அணிக்கும் இடையே நடந்த போட்டிக்குப் பிறகு, அந்த 15 வயது சிறுவனிடம் ஜஸ்டின் லாங்கர் நேரில் சென்று தனுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு அந்த சிறுவனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்து செல்ஃபி எடுத்துக் கொண்டான். இது பலருக்கு ஒரு சாதாரண செல்ஃபியாகத் தெரிந்தாலும், ஜஸ்டின் லாங்கரின் வாழ்க்கையிலேயே அவர் எப்போதும் மறக்க முடியாத ஒரு மிக முக்கிய புகைப்படமாக இது மாறியுள்ளது.

ஏனென்றால், ஜஸ்டின் லாங்கர் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையிலேயே ஒரு விளையாட்டு வீரரிடம் ஆசைப்பட்டு செல்ஃபி கேட்பது இது வெறும் 2-ஆவது முறையாகும். இதற்கு முன்பு 2 ஆண்டுகளுக்கு முன்னால், பெர்த் நகரின் ஆப்டஸ் மைதானத்தில் வச்சு, தனது சிறு வயது ஹீரோவும் ஆஸ்திரேலிய கால்பந்து லீக் (AFL) தொடரின் ஜாம்பவானுமான ஸ்டீபன் மைக்கேலை நேரில் பார்த்த போதுதான் லாங்கர் முதன்முதலில் செல்ஃபி எடுத்திருந்தார். அதன் பிறகு தற்பொழுது இந்த 15 வயது இந்திய சிறுவனுடன் அவர் புகைப்படம் எடுத்துள்ளார். ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிரிஸ் கெய்லின் நீண்ட கால சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தகர்த்து எறிந்த அடுத்த நாளே, ஜஸ்டின் லாங்கர் தனது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் இந்த சிறுவனின் அசாத்திய கிரிக்கெட் திறமையைப் பாராட்டி ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து எழுதியுள்ள ஜஸ்டின் லாங்கர், கடந்த வாரம் தனது வாழ்க்கையிலேயே இதுவரை 2 முறை மட்டுமே செய்த ஒரு காரியத்தை தான் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, மற்றொரு விளையாட்டு வீரரிடம் தான் செல்ஃபி கேட்டதாகக் கூறிய அவர், முதல் முறை தனது சிறு வயது கால்பந்து ஹீரோ ஸ்டீபன் மைக்கேலிடமும், 2-ஆவது முறை பீகாரின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்த 15 வயது சிறுவனிடமும் செல்ஃபி எடுத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி தனது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்து வெளுத்து வாங்கியதாக அவர் பாராட்டியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் அவர் 53 சிக்ஸர்களைப் பறக்கவிட்டுள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே கிரிஸ் கெய்லுக்கு அடுத்தபடியாக ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த 2-ஆவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஆண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் சதமடித்த வீரரும் அவர்தான், அவருக்கு இன்னும் வெறும் 15 வயதே ஆகிறது என்று லாங்கர் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் சுமார் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த என்னாலேயே, இந்த சிறுவன் விளையாடும் ஸ்டைலை இன்னும் நம்ப முடியவில்லை என்றும், தனது வாழ்க்கையில் இதுவரை இது போன்ற ஒரு வீரரைத் தான் பார்த்ததே இல்லை என்றும் லாங்கர் புகழ்ந்துள்ளார். நேற்று இரவு நடந்த பிளே-ஆஃப் ஃபைனல் (Play-off Final) போட்டியிலும் சூர்யவன்ஷி இதே போன்ற அதிரடி ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இவருடைய ஆட்டம், திறமை என்ற வார்த்தையைப் பற்றித் தன்னை ஆழமாகச் சிந்திக்க வைத்துள்ளதாக லாங்கர் கூறியுள்ளார். மேலும், சூர்யவன்ஷியின் இந்த அசாத்திய திறமையை ஆஸ்திரேலிய கால்பந்து உலகின் மற்றொரு ஜாம்பவானான ஸ்காட் பெண்டில்பெரியுடன் லாங்கர் ஒப்பிட்டுள்ளார். கடந்த வாரம் தான் 433 போட்டிகளில் விளையாடி ஆஸ்திரேலிய கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை ஸ்காட் படைத்திருந்தார். தங்களது விளையாட்டுப் பயணத்தின் இருவேறு முனைகளில் (ஆரம்பம் மற்றும் முடிவு) இருந்தபோதிலும், இந்த இரு வீரர்களும் தங்களது விளையாட்டில் எப்படி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதை ஜஸ்டின் லாங்கர் மிகவும் பெருமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com