அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர்.. 5வது நாளாக சல்லடை போட்டு தேடும் போலீசார்! சிக்கிய மர்மப் பை - என்ன நடந்தது?

அவரை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது...
அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர்.. 5வது நாளாக சல்லடை போட்டு தேடும் போலீசார்! சிக்கிய மர்மப் பை - என்ன நடந்தது?
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய மாணவர் ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தேடும் பணிகள் சனிக்கிழமை ஐந்தாவது நாளாகத் தீவிரமடைந்துள்ளது.

யார் இந்த சாகேத் சீனிவாசையா?

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான சாகேத் சீனிவாசையா, சென்னை ஐஐடி-யில் (IIT Madras) பயின்ற முன்னாள் மாணவர் ஆவார். தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UC Berkeley) வேதியியல் மற்றும் உயிரியக்கவியல் பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார். பெங்களூருவின் ஸ்ரீ வாணி கல்வி மையத்தில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், மிகவும் திறமையான மாணவராக அறியப்படுகிறார். ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்திற்கான குளிரூட்டும் முறையைக் கண்டுபிடித்ததற்காக ஐந்து பேருடன் இணைந்து காப்புரிமை (Patent) பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி முதல் சாகேத் மாயமாகியுள்ளார். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அவர் கடைசியாகக் காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், வளாகத்திற்கு அருகிலுள்ள 'டில்டன் பிராந்திய பூங்கா' பகுதியில் ஒரு மர்மப் பை கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பையில் சாகேத்தின் பாஸ்போர்ட் மற்றும் மடிக்கணினி (Laptop) இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாகேத்தின் உடைமைகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்சா ஏரி (Lake Anza) மற்றும் பெர்க்லி மலைப்பகுதிகளில் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. படகுகள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சாகேத் 6 அடி 1 அங்குல உயரமும், சுமார் 72 கிலோ எடையும் கொண்டவர். கறுப்பு நிறக் கூந்தலும், பழுப்பு நிறக் கண்களும் உடையவர் என அடையாளம் பகிரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் கவலை தெரிவித்துள்ளது. மாணவரின் குடும்பத்தினருடனும், அமெரிக்க அதிகாரிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அவரை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மாணவர்களுடன் தொடர் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. திறமையான ஒரு இளம் இந்திய மாணவர் மாயமாகியுள்ளது அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com