சூப்பர் மார்க்கெட் Fridge-யே ஹேக் செய்த மர்ம கும்பல்! 700 கடைகளில் உணவுப் பொருட்கள் நாசம்… ஈரான் மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு!

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை இருப்பதாகப் பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
France supermarket cyberattack
France supermarket cyberattack
Published on: 
Updated on: 
2 min read

பொதுவாக சைபர் தாக்குதல் என்றால் இணையதளங்களை முடக்குவது, வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருடுவது அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், ஒரு நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிர்சாதனப் பெட்டிகளையே இணையம் வழியாகக் கட்டுப்படுத்தி, அதில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ள முடியுமா? பிரான்ஸில் நடைபெற்றுள்ள ஒரு சைபர் தாக்குதல் இதுபோன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை இருப்பதாகப் பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த அக்டோபர் 12ஆம் தேதி அதிகாலை பிரான்ஸ் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உணவுப் பொருட்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் குளிர்பதனக் கருவிகள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகின. ஹேக்கர்கள் தொலைதூரத்தில் இருந்தபடியே இந்தக் கருவிகளின் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குள் ஊடுருவி, அவற்றின் வெப்பநிலையைத் திடீரென உயர்த்தியுள்ளனர். இதனால் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பால், இறைச்சி, மீன், காய்கறிகள் உள்ளிட்ட குளிரில் பாதுகாக்கப்பட வேண்டிய பொருட்கள் கெட்டுப்போகும் நிலை ஏற்பட்டது.

இந்தத் தாக்குதலால் பிரான்ஸில் உள்ள சுமார் 10,000 சூப்பர் மார்க்கெட்டுகளில் 700 கடைகள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில குளிர்சாதனக் கருவிகளின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. சுமார் ஆறு மணி நேரம் இந்த நிலை நீடித்ததால், கடைகளில் இருந்த புதிய மற்றும் உறையவைக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பாதுகாக்க முடியாமல் போனது. அவற்றை விற்பனை செய்ய முடியாததால் கடைகள் பெருமளவில் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.

பிரான்ஸின் முக்கியமான சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களில் ஒன்றான இன்டர்மார்ஷே, ஒரே நாளில் பல கோடி யூரோக்கள் மதிப்பிலான இழப்பைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளது. மேலும், வெப்பநிலையை அதிகரிக்கும் வகையில் குளிர்பதனக் கருவிகள் மாற்றப்பட்டதால் சில இடங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலின் விளைவாக குறைந்தது 15 தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் அரசு விரிவான விசாரணையைத் தொடங்கியது. அந்த நாட்டின் தேசிய இணையப் பாதுகாப்பு அமைப்பான ANSSI, உளவுத்துறை அமைப்புகளுடன் இணைந்து நடத்திய ஆய்வில், 'ஷாஹித் காவே' (Shahid Kaveh) என்ற சைபர் தாக்குதல் குழுவின் தொடர்பு கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் குழு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடையது என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட இணையக் கட்டமைப்புகளில் பாரசீக மொழியின் தடயங்கள் இருந்ததும், ஈரானில் உள்ள சாதனங்களுடன் தொடர்புடைய இணைய முகவரிகள் கண்டறியப்பட்டதும் விசாரணையில் முக்கிய ஆதாரங்களாகக் கூறப்படுகின்றன. மேலும், இதற்கு முன்பு நடைபெற்றதாகக் கூறப்படும் சில சைபர் தாக்குதல்களுடன் தற்போதைய தாக்குதலின் செயல்பாட்டு முறைகளும் ஒத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவின் தலைவரையும், அவருடன் தொடர்புடைய இரண்டு முக்கிய நபர்களையும் விசாரணையில் குறிவைத்துள்ள பிரான்ஸ் நீதித்துறை, அவர்களைக் கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணைகளையும் கோரியுள்ளது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-நோயல் பாரோ, ஈரான் தூதரை அழைத்து விளக்கம் கோரியுள்ளார். மேலும், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். பிரான்ஸின் தேசியப் பாதுகாப்புக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இத்தகைய தாக்குதல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதே அந்நாட்டின் நிலைப்பாடாக உள்ளது.

பிரான்ஸில் உள்ள ரத்த வங்கிகளின் குளிர்சாதன வசதிகளையும் குறிவைத்து மற்றொரு சைபர் தாக்குதல் முயற்சி நடைபெற்றுள்ளது. ஆனால், முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் ரத்தப் பொருட்கள் மற்றும் மாதிரிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இதேபோல் ஸ்வீடன், பெல்ஜியம், லக்சம்பர்க், அயர்லாந்து, எஸ்டோனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் சூப்பர் மார்க்கெட் குளிர்சாதனப் பெட்டிகள் தொடர்பான இணையத் தாக்குதல் சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும், இந்தச் சம்பவங்கள் அனைத்துக்கும் ஒரே குழுதான் காரணம் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுவரை இணையதளங்கள் மற்றும் தகவல் சேமிப்பு அமைப்புகளை மட்டுமே குறிவைத்ததாகப் பார்க்கப்பட்ட சைபர் தாக்குதல்கள், தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தையும் பாதிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளன. ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது எல்லைகளையும் ராணுவத்தையும் மட்டும் சார்ந்ததல்ல; அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான தொழில்நுட்பக் கட்டமைப்புகளையும் பாதுகாப்பது அவசியம் என்பதை பிரான்ஸில் நடந்த இந்தச் சம்பவம் உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.