

கேரளாவைச் சேர்ந்த அருணிமா என்ற டிராவல் விளாகர் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டதாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவசர உதவி கேட்டு போட்டிருந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த 3 மணிநேரத்தில் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அதிகாரிகளிடம் பேச்சுவார்தை நடத்தி வெளியாகியுள்ளார்.
தனது ‘Backpacker Arunima’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அருணிமா, ஆப்கானிஸ்தானில் தன்னை முஜாஹிதீன்கள் கைது செய்ததாகக் கூறும் அதிகாரப்பூர்வ தகவலின் மொழிபெயர்ப்பு எனக் குறிப்பிட்டு ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். அதில், “உங்களிடம் அதிகாரப்பூர்வ கடிதம் இல்லாததால், சற்று முன்புதான் முஜாஹிதீன்களால் நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைப் பகிர்ந்து, இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள உதவி கோரிய அருணிமா, “ஆப்கானிஸ்தானில் நான் பிரச்னையில் சிக்கியுள்ளேன். நான் பாமியான் பகுதியில் இருக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
எனினும் அவரைக் கைது செய்தது யார், எந்த சூழலில் கைது நடைபெற்றது என்பது குறித்த விவரங்கள் பதிவில் இல்லை. காபூல் மற்றும் புதுடெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகளும், அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இதையடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்ட விரிவான பதிவில், முஜாஹிதீன்களால் தான் விடுவிக்கப்பட்டதாக அருணிமா தெரிவித்தார். அவசர உதவி கோரி பதிவிட்டது முதல் தான் விடுவிக்கப்படும் வரை என்ன நடந்தது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
அதன்படி, “இந்த நாட்டின் சட்டத்தின்படி, ஒரு பெண் தனியாகப் பயணம் செய்ய முடியாது. நீங்கள் சட்டத்தை மீறியுள்ளதால் கைது செய்யப்படுவீர்கள்" என என பாமியான் அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக அருணிமா கூறினார்.
பெண்கள் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படாத நாட்டில் தான் தனியாக பயணித்ததுதான் குற்றம், ஆனால், தனியாகப் பயணம் செய்யும் பெண்ணுக்கு அந்த அனுமதியை அவர்கள் வழங்க மாட்டார்கள் என்பதால், அந்த அனுமதிகளைப் பெறாமல் சென்றுள்ளார்.
சட்டத்தை மீறியதாகக் கூறி தன்னை கைது செய்யப்போவதாக அதிகாரிகள் தெரிவித்ததும் தான் மிகவும் பயந்துவிட்டதாக அவர் கூறினார். இதையடுத்து, தன்னை முன்பு பாமியான் பகுதிக்கு அழைத்துச் செல்ல உதவிய ஒருவரைத் தொடர்புகொண்டதாகவும், அவர் தனது சார்பில் அதிகாரிகளிடம் பேசியதாகவும் அருணிமா தெரிவித்தார்.
அருணிமாவின் கூற்றுப்படி, முஜாஹிதீன்கள் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்றும், ஒரு வழிகாட்டியுடன் பயணம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அடுத்த இடத்துக்கு தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது பதிவில், “நான் இந்த நாட்டை விட்டு வெளியேறி உஸ்பெகிஸ்தானுக்குச் செல்கிறேன் என்று அவர்களிடம் தெரிவித்தேன். ஆனால், விதிகளை மீறி இத்தனை நாட்கள் நாட்டில் தங்கியிருந்ததால் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதத்தைச் செலுத்தாமல் எங்கும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறினர்.
இதையடுத்து அவர்களிடம் பேசி, இந்தப் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டேன். இறுதியில், அனுமதிச் சீட்டு இல்லாமலேயே அடுத்த நாட்டுக்குச் செல்லலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்" என்று அருணிமா கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தான் ஒரு பெண் என்பதற்காகவே இதுபோன்ற தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டதாகவும், அதே நேரத்தில் தனது ஆண் நண்பர்கள் தலிபான் ஆட்சியின் கீழ் உள்ள அந்த நாட்டில் இதுபோன்ற பிரச்னைகள் எதுவுமின்றி பயணம் செய்ததாகவும் அருணிமா தெரிவித்தார்.
தனக்கு நேர்ந்த அனுபவத்தை மேலும் விவரித்த அருணிமா, “இங்கு அவர்களின் முடிவுகளே சட்டம். இங்கு காவல்துறையோ, சிறையோ அல்லது அதுபோன்ற வேறு அமைப்புகளோ இல்லை. இங்குள்ள ஒவ்வொருவரும் தலிபான்கள்தான். மக்களும் இருக்கின்றனர். ஆனால் ஆங்காங்கே இருக்கும் தாலிபான்கள் வைப்பதுதான் சட்டமாக இருக்கிறது.
நான் அந்த நபரின் கைகளையும் கால்களையும் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன். அதனால்தான் அவர்கள் என்னைக் கைது செய்யவில்லை. சில மணி நேரம் நான் நரக வேதனையாக இருந்தது. மிகவும் பதற்றமாக இருந்தேன்; என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் இறக்கப்போகிறேன் என்ற உணர்வு ஏற்பட்டது. எனக்கு ஏதோ நடக்கப்போகிறது என்று தோன்றியது." எனப் பதிவிட்டுள்ளார்.
அருணிமா உலகின் பல நாடுகளுக்கு தனியாக பயணம் செய்துள்ளார். ஆப்ரிக்கா முதல் தென்னாபிரிக்கா வரை பல கண்டங்களுக்கு சென்றுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் நுழைந்த அவர், புர்கா அணிந்த படி பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளார். தொடர்ந்து அவரது சமூக வலைத்தள பார்வையாளர்களுக்கு அப்டேட்டுகளை வழங்கியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்