“KFC-க்கே போட்டியா?.." விளம்பரமே இல்லாமல் 100 கிளைகள்! லண்டனை அசைத்திய இலங்கை தமிழர் - 'மோர்லே' பிரபலமானது இப்படித்தான்

லண்டன்வாசிகள் அனைவரது விருப்ப கடையாக இந்த 'மோர்லே' மாறியது.
Morley's Chicken success story
Morley's Chicken success story
Published on: 
Updated on: 
2 min read

இன்று பொரித்த சிக்கன், பர்கர் என்றாலே பல இளைஞர்களால் உடனே கூறப்படுவது 'KFC' அல்லது 'மெக்டோனெல்ஸ்'தான். ஆனால் அதை மாற்றி எழுதி, இதுபோன்ற 'பாப் கலாச்சார உணவுகள்' என்றாலே அமெரிக்கர்களிடமிருந்து வருவதுதான் என்ற நினைப்பை அப்படியே மாற்றிய ஒரு கடையை பற்றித்தான் இங்கு நாம் காணவிருக்கிறோம்.

இலங்கையில் பிறந்து 1970களில் தனது சொந்த ஊரான கொழும்பிலிருந்து லண்டனுக்குக் குடிபெயர்ந்த கண்ணலிங்கம் "இந்திரன்" செல்வேந்திரனால் 'மோர்லே' என்ற சிக்கன் கடை நிறுவப்பட்டது. இதுபோன்ற உணவுகள் என்றாலே அமெரிக்காதான் என்பதை மாற்றி, சிறிய தெருவோர கடைகளும் தரமானதாக கொடுக்கும் என்ற முத்திரையை பதிய வைத்தவர்தான் செல்வேந்திரன்.

லண்டனில் இவர்கள் தொடங்கிய இந்த 'மோர்லே' கடையானது தொடங்கியதும் சிகரத்தை தொட்டுவிடவில்லை. இவர்கள் லண்டன் வந்து 10 ஆண்டுகள் கழித்து இந்த கடையை திறந்துள்ளனர். மேலும், வெளிநாட்டினர் ஒருவர் தங்கள் சொந்தத் தொழில்களைத் தொடங்கி, தங்களுக்கென ஒரு பாரம்பரியத்தை உருவாக்கிக் கொள்வது என்பது எப்போதும் ஒரு எளிதான வாய்ப்பாக இருந்ததில்லை.

தெற்கு லண்டனில் 'மோர்லே'-யின் பெயர் பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டது. லண்டன்வாசிகள் அனைவரது விருப்ப கடையாக இந்த 'மோர்லே' மாறியது. கடையும் நன்றாக போய்க்கொண்டிருந்த சமயத்தில் 2002-ல் 'மோர்லே' உரிமையாளரான கண்ணலிங்கம் "இந்திரன்" செல்வேந்திரன் காலமானார். இதனையடுத்து, இந்த கடையானது அவரது மகனான ஷான்-னிடம் மாற்றப்பட்டது.

தற்போது உள்ளது போல பெரிய பெரிய விளம்பரங்களோ, விளம்பர பிரச்சாரங்களோ எதுவுமே இந்த கடை பிரபலமாக செய்யப்படவில்லை என்பதுதான் இதில் ஆச்சர்யமான விஷயமே. சுவையே இதன் ஆஸ்தான விளம்பரமானது, தரமே இதன் விளம்பர பிரச்சாரமானது.

செல்வேந்திரனின் மகன் ஷானின் கைக்கு 2009-ல் 'மோர்லே' சென்ற பின்பு, 'மோர்லே' 100 கிளைகளாக பல்வேறு இடங்களில் பரந்து விரிந்தது. அதுமட்டும் இல்லை, 'மோர்லே' கடையில் கொடுக்கப்பட்ட மொறுமொறு சிக்கன்கள், நீள நீள சிப்ஸ்கள் என்று, இளைஞர்களால் பெரிதும் பேசப்பட்ட மற்றும் பெரிதும் விரும்பப்பட்ட 'இரவு நேர ஸ்பாட்டாக' மாறியது. மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மீம்ஸ்கள் போன்றவற்றில் 'மோர்லே' அடையாளமாக (icon) பயன்படுத்தப்பட்டது.

"சரி.. அப்போ இந்த கடையானது, பெரிய தொழிற்சாலைபோல இயங்கும், நிறைய தொழிலாளர்கள் இருப்பார்கள் அப்படித்தானே?" என்று நீங்கள் கேட்டால், அது தான் இல்லை. எளிமையாக உள்ள இயந்திரங்களை பயன்படுத்தி, குறைவான வேலை ஆட்களை கொண்டு தரமான உணவுகளை 'மோர்லே' பல ஆண்டுகளாக மக்களுக்கு கொடுத்து வருகிறது. 'மோர்லே' தற்போது அவர்களது குடும்ப உறுப்பினர்களால் நிர்வாகிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு பல மில்லியன் டாலர் பணம் சம்பாதித்து கொடுக்கும் தளமாக மாறியுள்ளது.

கடின உழைப்பு, சரியான பார்வை, தரம் இவை நேர்மையான நோக்கத்தோடு இருந்தாலேபோதும் சிகரம் தொடும் வெற்றியை நாம் அடைய முடியும், நமது போட்டியாளர் அசைக்கமுடியாத ஒரு நிலையில் இருந்தாலும் சரி 'வெற்றி நமதே' என்பதை 'மோர்லே' எளிமையாக சொல்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com