

பாலேந்திர ஷா புதிய பிரதமராகப் பதவியேற்ற மறுநாள், கடந்த ஆண்டு நடந்த உயிரிழப்புகளை ஏற்படுத்திய ஜென் Z தலைமுறைப் போராட்டங்களில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி கைது செய்யப்பட்டுள்ளார் . பக்தாபூர், குண்டுவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நேபாள காவல்துறையினரால் ஓலி கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜென் Z தலைமுறைப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பான கொலை வழக்கில், நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஓலி பக்தாபூர், குண்டுவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காவலில் எடுக்கப்பட்டுள்ளார். அதேசமயம் லேகக் இன்று காலை சுமார் 5 மணியளவில் பக்தாபூர், சூர்யபினாயக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவரது தனிச் செயலாளர் தெரிவித்தார். உள்துறை அமைச்சகம் அளித்த முறையான புகாரைத் தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
சமூக ஊடகத் தடை மற்றும் அரசியலில் நிலவும் ஊழல், அரசியலில் நிலவும் உறவுமுறைச் நெருக்கம் ஆகியவற்றால் அதிகரித்து வந்த அதிருப்திக்கு எதிர்வினையாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இளைஞர்கள் தலைமையில் வெடித்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு மறுநாள், நாடாளுமன்றம் மற்றும் அரசாங்க அலுவலகங்களுக்குத் தீ வைக்கப்பட்டதால், இந்தக் கலவரம் நாடு முழுவதும் பரவியது. இதில் மேலும் பலர் கொல்லப்பட்டதோடு, அந்நாட்டு அரசாங்கமும் கவிழ்ந்தது. அதன் பின்னர், காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படும் ஓலியையும் அவரது உள்துறை அமைச்சரையும் இந்த மரணங்களுக்குப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.
புதிதாக நியமிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் சுதான் குருங், அவர்களின் கைதுகளை பற்றி சமூக ஊடகங்களில் அறிவித்தார். “சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை. முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் ஆகியோரை நாங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம்,” என்று குருங் கூறினார். “இது யாருக்கும் எதிரான பழிவாங்கல் அல்ல, இது நீதியின் தொடக்கம் மட்டுமே" என்றும் அறிவித்திருக்கிறார். முன்னர் இரண்டு முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 74 வயதான ஓலி கைது செய்யப்பட்டதற்கு பிறகு காவல் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போராட்டங்களின் முதல் நாளில், பல மணிநேரம் நீடித்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 19 ஜென் Z போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததே ஓலியைப் பொறுப்பாக்கியது என்று விசாரணை குழு கூறியிருக்கிறது. இதுமட்டுமின்றி, அந்த அடக்குமுறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றத்திற்காக, ஓலி, லேக்கக் மற்றும் போராட்டங்களின் போது காவல்துறைத் தலைவராக இருந்தவர் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அந்த விசாரணை பரிந்துரைத்திருந்தது. மேலும், இந்த மரணங்கள் மீதான கோபமே, ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி இந்த மாதம் நேபாளத்தில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற உதவியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.