பெல்ஜியத்தில் பெரும் சோகம்: ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம்!

வேனில் ஏழு குழந்தைகள், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஓட்டுநர் என மொத்தம் ஒன்பது பேர் இருந்ததாக
school bus accident Belgium
Published on
Updated on
1 min read

பெல்ஜியத்தின் வடக்கு பகுதியில் உள்ள பக்கென்ஹவுட் என்ற கிராமத்தில் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது ரயில் மோதியதில் பலரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளில், ரயில் பாதையோர சாலையில் அந்த பள்ளி வேன் பலத்த சேதமடைந்து கவிழ்ந்து கிடப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகளுக்காக அந்த இடத்தில் அவசரகாலக் குழுவினர் கூடாரங்களை அமைத்துத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த விபத்து நடந்தபோது, வேனில் ஏழு குழந்தைகள், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஓட்டுநர் என மொத்தம் ஒன்பது பேர் இருந்ததாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்துப் பேசிய ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஃப்ரெடெரிக் சாக்ரே, இந்த மோதல் மிகவும் பயங்கரமாக இருந்ததாகவும், உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை என்றும் கூறியுள்ளார். காலை சுமார் 8:08 மணியளவில் இந்த விபத்து நடந்திருக்கிறது. அடுத்த ரயில் நிலையம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருந்ததால், ரயில் மிகக் குறைந்த வேகத்திலேயே சென்றுகொண்டிருந்தபோது வேன் மீது மோதியதாகத் தெரிகிறது. விபத்து குறித்து அதிகாரப்பூர்வமாகப் பலி எண்ணிக்கையைத் தெரிவிக்க மறுத்தாலும், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ள பெல்ஜிய உள்துறை அமைச்சர் பெர்னார்ட் குவின்டின், விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வரத் தேவையான வலிமையைத் தான் விரும்புவதாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ரயிலுடன் மோதிய இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் மட்டுமின்றி உலக அளவில் பெரும் சோகத்தைச் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com