“ஹார்முஸ் அமெரிக்காவின் பிரதேசம்” என டிரம்ப் அதிரடி.. பதிலடி கொடுத்த ஈரான் – கப்பல் தகுதலால் நீடிக்கும் பதற்றம்!

ஹார்முஸ் அமெரிக்காவின் ஒரு பகுதி என்பதை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ள மேப்பை டிரம்ப் பகிர்ந்திருப்பது...
Trump Hormuz Strait
Trump Hormuz Strait
Published on
Updated on
2 min read

அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் பிராந்தியம் என குறிப்பிடும் வகையிலான மேப்பை டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளையும் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தி, உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த கடல் வழி பாதையை கடந்து செல்கிறது. இதனால் ஹார்முஸ் மீதான கட்டுப்பாடு அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதலில் முக்கிய விவகாரமாக மாறியுள்ளது.

“அமெரிக்காவின் பிரதேசம்” – டிரம்ப் அதிரடி

ஈரானுக்கு எதிரான கடற்படை நடவடிக்கைகள் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா கட்டுப்படுத்தி வருவதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும், ஹார்முஸை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பது நல்ல யோசனையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஹார்முஸ் அமெரிக்காவின் ஒரு பகுதி என்பதை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ள மேப்பை டிரம்ப் பகிர்ந்திருப்பது, சர்வதேச அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் கடும் பதிலடி

டிரம்பின் இந்த நிலைப்பாட்டுக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வர்த்தக கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் திட்டம் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் முகமது பகேர் காலிபாஃப், அமெரிக்கா முதலில் தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல், ஈரான் மீதான எண்ணெய் தடைகளை அகற்றுதல் மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரான் சொத்துகளை விடுவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸில் தொடரும் பதற்றம்

இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் வழியாக சென்ற கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதில் கப்பலின் என்ஜின் அறை சேதமடைந்ததுடன், ஒரு மாலுமி காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யார் காரணம் என்பது உறுதி செய்யப்படவில்லை. எனினும், ஈரான் அல்லது ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஹார்முஸ் வழியாக சுதந்திரமான கப்பல் போக்குவரத்து தொடர வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக உள்ளது. மறுபுறம், தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு ஹார்முஸ் தொடர்பாக ஈரான் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், உலகின் முக்கிய எரிசக்தி கடல்வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி தற்போது சர்வதேச அரசியலின் மிகப்பெரிய பதற்ற மையமாக மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com