அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதற்குப் பதிலளிக்காமல் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஆர்வம் காட்டாத வடகொரியா, மறுபுறம் தனது அணு ஆயுதங்களையும் ஏவுகணைத் திறனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களைக்கூடத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை வடகொரியா உருவாக்கி வருவது வாஷிங்டனுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு கிம் ஜாங் உன்னுடன் தொடர்பை ஏற்படுத்த ட்ரம்ப் முயற்சி செய்துள்ளார். இதற்காக ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வந்த தொலைபேசி மற்றும் அதிகாரப்பூர்வத் தொடர்பு வழிகளை அமெரிக்கா பயன்படுத்தியது. ஆனால், வடகொரியத் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, கிம்முக்கு ட்ரம்ப் கடிதம் ஒன்றையும் அனுப்ப முயன்றுள்ளார். ஆனால், அந்தக் கடிதத்தைக்கூட அவரிடம் கொண்டு சேர்ப்பது அமெரிக்க அதிகாரிகளுக்குச் சவாலாக இருந்துள்ளது.
இதற்காக நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வடகொரிய நிரந்தரத் தூதரகத்தின் அருகே அமெரிக்க அதிகாரிகள் காத்திருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வடகொரியத் தூதரிடம் கடிதத்தை ஒப்படைத்துள்ளனர். பின்னர் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில், அந்தத் தூதர் திறக்கப்படாத கடிதத்தை அமெரிக்கப் பிரதிநிதியின் முன்பாக வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
ட்ரம்ப் தனது முதல் அதிபர் பதவிக் காலத்தில் கிம் ஜாங் உன்னை மூன்று முறை நேரில் சந்தித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களைக் குறைப்பது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். 2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பு, பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவர் வடகொரியத் தலைவரை நேரில் சந்தித்த முதல் நிகழ்வாக அமைந்தது. ஆனால், அந்தச் சந்திப்புகளால் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.
2019ஆம் ஆண்டு வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற்ற இரண்டாவது உச்சி மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா கடுமையான நிபந்தனைகளை முன்வைத்தது. அதற்குப் பதிலாக ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வேண்டும் என்று கிம் தரப்பு எதிர்பார்த்தது. இரு தரப்பினரும் ஒருமித்த முடிவுக்கு வராததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அதன்பிறகு இரு தலைவர்களும் சந்தித்தாலும், அணு ஆயுதப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை.
இதற்கிடையே வடகொரியாவின் அணு ஆயுத இருப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டு அந்த நாட்டிடம் சுமார் 20 முதல் 30 அணு ஆயுதங்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 60 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவைச் சென்றடையக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் வடகொரியா உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, திட எரிபொருளைப் பயன்படுத்தும் ஏவுகணைகள் அமெரிக்காவுக்குப் பெரிய சவாலாக உள்ளன. திரவ எரிபொருள் ஏவுகணைகளை ஏவுவதற்கு முன்பு எரிபொருள் நிரப்ப வேண்டியிருக்கும். இதனால் அவற்றின் தயாரிப்பை முன்கூட்டியே கண்டறிய வாய்ப்புள்ளது. ஆனால், திட எரிபொருள் ஏவுகணைகளை முன்கூட்டியே தயாராக வைத்திருக்க முடியும். மேலும், நகரும் ஏவுதளங்களில் இருந்தும் அவற்றை ஏவ முடியும் என்பதால் கண்காணிப்பதும் தடுப்பதும் கடினமாகிறது.
வடகொரியா தனது ராணுவ வலிமையை அதிகரிப்பதற்கு ரஷ்யாவுடனான நெருக்கமும் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கிய பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றது. வடகொரியா ரஷ்யாவுக்கு ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி வெடிகுண்டுகளை வழங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலாக ரஷ்யா செயற்கைக்கோள் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது.
2023ஆம் ஆண்டு ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் கிம் ஜாங் உன்னும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்தனர். தொடர்ந்து, இரு நாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டன. இதன்படி, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்று தாக்கப்பட்டால் மற்ற நாடு உதவ வேண்டும் என்ற உறுதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வடகொரியாவின் சர்வதேச நிலை மேலும் வலுப்பெற்றுள்ளது.
தற்போது அமெரிக்காவுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால், வடகொரியாவின் அணு ஆயுத வளர்ச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதுதான். கிம் ஜாங் உன் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடத் தயாராக இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. இந்நிலையில், ட்ரம்பின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கும் பதில் கிடைக்காததால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா இனி எந்த வழியில் வடகொரியாவை அணுகப்போகிறது என்பதே உலக நாடுகளின் கவனமாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.