உலகை ஆள நினைக்கும் வல்லரசுகள்... கைகுலுக்கிக் கொண்ட ட்ரம்ப், புதின், ஜி ஜின்பிங்.. கைவிடப்பட்ட உக்ரைன், ஈரான், காசா?

இவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அமைதிக்கான கூட்டறிக்கையில், "அணு ஆயுதப் போரில் வெற்றி பெற முடியாது, அது ஒருபோதும் நடத்தப்படவும் கூடாது" என்றும் கூறியுள்ளனர்.
Trump, Putin, Xi Jinping Hold Historic Meeting: What About Ukraine, Iran and Gaza?
உலகை ஆள நினைக்கும் வல்லரசுகள்... கைகுலுக்கிக் கொண்ட ட்ரம்ப், புதின், ஜி ஜின்பிங்.. கைவிடப்பட்ட உக்ரைன், ஈரான், காசா?
Published on: 
Updated on: 
2 min read

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களுக்கு இடையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தை முதன்முறையாக நடந்து முடிந்திருக்கிறது.

ட்ரம்ப், ஜி ஜின்பிங் மற்றும் புதின் மூவரும் உலக அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர்களாகத் திகழ்கின்றனர்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஷென்சென் நகரில் இவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடந்துள்ளது.

ட்ரம்ப் - புதின், ட்ரம்ப் - ஜி ஜின்பிங், ஜி ஜின்பிங் - புதின் எனத் தனித்தனியாக இவர்கள் சந்தித்திருந்தாலும், மூவரும் ஒன்றாகப் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதன்முறை. இந்தச் சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நடந்துள்ளது.

இவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அமைதிக்கான கூட்டறிக்கையில், "அணு ஆயுதப் போரில் வெற்றி பெற முடியாது, அது ஒருபோதும் நடத்தப்படவும் கூடாது" என்றும் கூறியுள்ளனர்.

பெட்ரோலிய உற்பத்தியையும் விநியோகத்தையும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், உலகளாவிய சவால்களுக்குத் திறம்படப் பதிலளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையைத் திருத்தி அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

"சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் அதுபோன்ற பிற நிறுவனங்களும் தங்களது அதிகார வரம்பைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது" என்று ஒருமனதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தச் சந்திப்பை, "ஒரு சிறந்த மற்றும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பயணம்" எனக் கூறியுள்ளார்.

மூவரும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் 'நண்பர்' என அழைத்துக் கொண்டனர். இன்முகத்தோடு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். ஆனால், இந்த மூவருக்குமே இந்தக் கூட்டத்தில் வெவ்வேறு இலக்குகள் இருந்தன.

இந்தக் கூட்டத்துக்கு முன்பு பேசிய புதின், இதில் உக்ரைனில் நடைபெறும் போரை நிறுத்துவதில் மூன்று நாடுகளுக்கும் இருக்கும் பரஸ்பர ஆர்வம் மற்றும் உணவு, எரிசக்திப் பாதுகாப்பு பற்றியும் விவாதிக்கப்படும் எனக் கூறினார்.

சீன அதிபர் ஜி, "வல்லரசு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒரு விருப்பத்தேர்வு அல்ல; கட்டாயத் தேவை" எனப் பேசினார்.

சீனா, ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரில் நடுநிலையாக இருக்க முயற்சித்து வருகிறது. 2022ஆம் ஆண்டு முதலே உக்ரைனும் அதன் கூட்டாளிகளும் சீனா, ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதாகவும் பிற உதவிகளைச் செய்வதாகவும் குற்றம்சாட்டி வந்தாலும், சீனா போரில் தனது ஈடுபாடு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.

ட்ரம்ப் - புதின் - ஜி ஜின்பிங் இடையில் மூடிய அறையில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் போர் தொடர்பாக விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சந்திப்புக்குப் பிறகு பேசிய ட்ரம்ப், "கடந்த காலத் தலைவர்கள் தங்களுக்குக் கருத்து வேறுபாடு உள்ள நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர்த்துள்ளனர். ஆனால், நாங்கள் அதற்கு நேர்மாறாக உணர்கிறோம்...

உலக அளவில் அணு ஆயுதப் பெருக்கத்தைக் குறைப்பது குறித்து உரையாட எங்களுக்குச் சிறப்புப் பொறுப்பு இருக்கிறது... அமெரிக்கா ஈரானில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" எனப் பேசினார்.

உக்ரைன் பற்றிப் பேசுகையில், அதுகுறித்து புதினிடம் நீண்ட விவாதம் நடத்தியதாகக் குறிப்பிட்டார் ட்ரம்ப். "நானும் புதினும் மற்றொரு தரப்பினர் போர் நிறுத்தத்தை விரும்புவார்கள் என நம்புகிறோம்" எனக் கூறினார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு, எந்த வகையிலும் நடந்து வரும் போர்களை முடிவுக்குக் கொண்டு செல்லும் பாதையில் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை என்பது சர்வதேச அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போரில் பாதிக்கப்பட்டு வரும் ஈரான், உக்ரைன் மற்றும் காஸாவுக்கு ஆதரவான கருத்துகளை எந்தத் தலைவரும் உதிர்க்காதது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காலநிலை மாற்றம் போன்ற முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்காமல், எரிசக்தி, அணு ஆயுதம் மற்றும் வல்லரசு நாடுகளுக்குத் தேவையான விவாதங்களை மட்டுமே நடத்தியிருப்பதாகக் கூறி விமர்சித்து வருகின்றனர்.

Trump, Putin, Xi Jinping Hold Historic Meeting: What About Ukraine, Iran and Gaza?
``தலைநகரிலேயே குண்டு போட தயாரா?" 'Dirty Bomb' என்பது என்ன.. அமெரிக்கா - ஈரான் போரின் அடுத்தகட்டமா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.