

பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவையில் (NHS) பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், தன்னுடன் வேலை செய்த நபர் தன்னைத் தொடர்ந்து 'ஆன்ட்டி' (Auntie) என்று அழைத்ததற்காகத் தொடரப்பட்ட வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். ஒருவரை மரியாதைக் குறைவாகவோ அல்லது அவர் விரும்பாத பெயரிலோ அழைப்பது பணியிடத்தில் ஒருவிதமான துன்புறுத்தல் (Harassment) என்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு சுமார் 1.45 லட்சம் ரூபாய் (1,425 பவுண்டுகள்) நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி என்னவென்றால், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மற்றும் அவரை 'ஆன்ட்டி' என்று அழைத்த நபர் இருவருமே ஆப்பிரிக்கப் பின்னணியைக் கொண்டவர்கள். பொதுவாக ஆப்பிரிக்க மற்றும் ஆசியக் கலாச்சாரங்களில் வயதில் மூத்தவர்களை 'ஆன்ட்டி' என்று அழைப்பது மரியாதைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த வழக்கில் அந்தப் பெண் தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று பலமுறை சொல்லியும், அந்த ஆண் ஊழியர் தொடர்ந்து கிண்டல் செய்யும் விதமாகவே அப்படி அழைத்ததாகக் கூறப்படுகிறது. இது அந்தப் பெண்ணுக்கு மிகுந்த மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
வேலை செய்யும் இடத்தில் ஒருவருடைய வயது அல்லது பாலினத்தை மையமாக வைத்து கிண்டல் செய்வது சட்டப்படி தவறு என்று பிரிட்டன் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த ஊழியர் அந்தப் பெண்ணை 'ஆன்ட்டி' என்று அழைத்தது ஒரு அன்பான மரியாதையாகத் தெரியவில்லை என்றும், மாறாக அவரை வயது முதிர்ந்தவர் என்று குத்திக்காட்டுவதற்காகவே திட்டமிட்டுச் சொல்லப்பட்ட வார்த்தை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப் பெண் தனது வேலையில் நிம்மதியாகச் செயல்பட முடியாமல் போனதாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
சம்பந்தப்பட்ட அந்த ஆண் ஊழியர் தனது தரப்பு வாதத்தில், தனது கலாச்சாரத்தின்படி மூத்த பெண்களுக்கு மரியாதை கொடுக்கவே அப்படி அழைத்ததாகக் கூறினார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே "என்னை இந்தப் பெயரில் அழைக்காதே" என்று தெளிவாகத் தெரிவித்த பிறகும் அதைத் தொடர்ந்தது நாகரீகமான செயல் அல்ல என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒருவருக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகவே கருதப்படும் என்று இந்தத் தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.