விவசாயியாக இருந்தவர் 3 வது முறை கட்சியின் மாநிலச் செயலாளர்..! இரா.முத்தரசனின் வாழ்க்கை..!

விவசாயியாக இருந்தவர் 3 வது முறை கட்சியின் மாநிலச் செயலாளர்..! இரா.முத்தரசனின் வாழ்க்கை..!

விவசாய தொழிலாளியாக இருந்த இரா.முத்தரசன் மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முத்தரசன்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகிலுள்ள அலிவலம் என்ற ஊரில் பிறந்த இரா. முத்தரசன், எளிமையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.  பெற்றோர் பெயர் ராமசாமி - மாரிமுத்து அம்மாள். இரண்டு பெண்கள் இரண்டு ஆண்கள் என முத்தரசனின் உடன் பிறந்தவர்கள் என மொத்தம் 4 பேர்.  65 வயதாகும் முத்தரசனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். 

இந்தி எதிர்ப்பு போராட்டம்:

1965 இல் ஆலத்தம்பாடி ஜானகி அம்மாள் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார் முத்தரசன். அந்த ஆண்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் எங்கும் தீவிரமடைந்தது. மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில், முத்தரசன் உள்ளிட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்  

அரசியல் ஆர்வம்:

பள்ளிப் பருவத்திலேயே சமூக அக்கறையுடன் செயல்பட்ட முத்தரசன் அலிவலம் இந்திய பொதுவுடமைக் கட்சியின் கிளைச் செயலாளரான கோவிந்தராசு என்பவரின் கவனத்தை ஈர்த்தார். எட்டாம் வகுப்பு படிக்கும் பொது ஜனசக்தி இதழை வாசிக்க நேர்ந்திருந்தது. அது தான் அவரது கவனத்தை கம்யூனிஸ்ட் பக்கம் திருப்பியது. குடும்பமே விவசாயத்தை கவனிக்க, டீக்கடை பெஞ்சில் பேசிய அரசியலை கவனிக்கத் தொடங்கினார் முத்தரசன். எட்டாம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்தியவர், திருத்துறைப்பூண்டி ஒன்றிய கட்சி அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக வேலை பார்த்துள்ளார்.

முதல் கட்சி பொறுப்பு:

1969ல் தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்ட முத்தரசன், ஆரம்பத்தில் திருத்துறைப் பூண்டி ஒன்றியத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் துணைத்தலைவராகவும், பின் நகர செயலாளராக 10 வருடங்களும், ஒன்றிய துணை செயலாளராக, ஒன்றிய செயலாளராக 2 வருடங்களும் பணியாற்றியுள்ளார்.

வரம்பை தாண்டி பேசாதவர்:

விவசாய தொழிற்சங்கத்தில், ஒருங்கிணைந்த பழைய தஞ்சாவூர் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக1990 வரையும், 1997 முதல் 2014 வரை அதே தொழிற் சங்கத்தில் மாநில செயலாளராகவும் தேர்வான முத்தரசன், 17 ஆண்டு காலம் அந்த பொறுப்பில் நீடித்துள்ளார். பல போராட்டங்களில் பங்கேற்றுள்ள முத்தரசன் பேச்சு, கூராக இருக்கும் என்றும், வரம்பைத் தாண்டி பேசமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

ஒரே ஒரு தேர்தல்:

மக்கள் சார்ந்த பல போராட்டங்களில் ஈடுபட்டு, படிப்படியாக உயர்ந்து மாநிலப் பொதுச்செயலாளராக உயர்ந்த முத்தரசன்,  தேர்தலில் ஒரேயொரு முறை மட்டும் போட்டியிட்டுள்ளார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கட்சியின் மாநில செயலாளர்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில செயலாளராக கோலோச்சிய தா.பாண்டியனுக்கு பின்னர், 2015 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் இரா. முத்தரசன்

பொறுப்புக்கு நன்றி:

கட்சியின் மாநில செயலாளராகப் பொறுப்பேற்றவுடன், "எட்டாம் வகுப்புத் தாண்டாத என்னை மாநில செயலாளராக்கி அழகுப் பார்த்துள்ளீர்கள். இந்தப் பதவி எனக்கு இடப்பட்ட பொறுப்பு தவிர பதவி அல்ல என்று கூறினார். இந்தப் பதவி எனக்குக் கிடைக்கும் என கற்பனையில் இருந்தது கூட கிடையாது. எதிர்பார்க்கவும் இல்லை என பேசி இருந்தார்.

மூன்றாவது முறை 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஆகஸ்ட் 9 ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினர்கள் 101 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மாநிலக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக இரா.முத்தரசனை 3 வதுமுறையாக மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்தனர். கட்சியின் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினராக திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் தேர்வு செய்யப்பட்டார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து:

முத்தரசனுக்கு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: "மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்தரசனுக்கு வாழ்த்துகள். சமத்துவத்தை நோக்கிய பொதுவுடைமைப் பாதையில் நமது லட்சியத்தை நோக்கி தொடர்ந்து பீடுநடை போட வாழ்த்துகிறேன்".

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com