எங்களுடன் கூட்டணி வைக்க ஒரு தகுதி வேண்டும்....அது திமுகவிடம் இல்லை - அண்ணாமலை விமர்சனம்!

எங்களுடன் கூட்டணி வைக்க ஒரு தகுதி வேண்டும்....அது திமுகவிடம் இல்லை - அண்ணாமலை விமர்சனம்!

இலவசம் கொடுப்பதனால் தமிழகத்தில் வளர்ந்தவர்கள் கோபாலபுரம் குடும்பத்தினர் மட்டும் தான் என அண்ணாமலை குற்றச்சாட்டு...

இலவச பொருள் விவகாரம்:

மாநில அரசாங்கத்தால் கொடுக்கப்படும் இலவச பொருட்களால் மக்கள் பயனடைகின்றனர் என்று மாநில அரசு கூறுவதை மத்திய அரசு நிராகரித்து வருகிறது.தங்களுடைய சுய லாபத்திற்காக இலவச பொருட்களை மக்களுக்கு கொடுத்து அதன்மூலம் மாநில அரசு வளர்ந்து வருவதாகவும், இலவச பொருட்களால் நிதி அளவு அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

அண்ணாமலை பேட்டி:

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து நேற்று மாலை திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை விமர்சனம் செய்தார். 

நிதியமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும்:

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர், கைதட்டலுக்காக எது வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்காக பேசுகிறார், முதலில் அவர் பேசுவதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்பதையும், அர்த்தம் இருக்கிறதா என்பதையும் கவனித்து பேச வேண்டும். இலவசங்களால் மட்டும் தான் தமிழகம் முன்னேறி கொண்டி இருக்கிறது என்று அவர் கூறுவது சரியா என்பதை திமுக ஆய்வு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை தமிழக நிதியமைச்சர் பிடிஆரை சாடினார்.  

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/Annamalai-has-ten-years-of-political-experience

நிதி சுமையில் முதலிடம்:

மக்களுக்கு இலவச பொருட்கள் கொடுப்பதால் தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை. இலவசம் கொடுப்பதனால் தமிழகத்தில் வளர்ந்தவர்கள் கோபாலபுரம் குடும்பத்தினர் மட்டுமே தவிர மக்கள் அல்ல. இலவச பொருட்களில் வரும் கமிஷன் மட்டுமே அரசியல்வாதிகளுக்கு லாபம் என்றும் முகஸ்டாலினை சாடியுள்ளார்...தொடர்ந்து பேசிய அவர், நிதி சுமையில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்த போது, 1 லட்சம் கோடி கடன் பெற்றதாகவும், ஆனால் தற்போது மீண்டும் 1.20ஆயிரம் கோடி கடன் கேட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

அதிக கடன் வாங்குவதில் முதலிடம்:

தொடர்ந்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி போதைப்பொருள் குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் போதைப்பொருளை விடமாட்டேன் என்று கூறினார். ஆனால் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரலாற்றில் இல்லாத அதிகபட்ச மது விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறினார். அதேபோன்று அதிக கடன் வாங்குவதிலும் திமுக அரசு முதலிடம், வாங்கிய கடனையும் முறையாக செலுத்தவில்லை என்பதிலும் முதலிடம். இப்படி இருக்க எந்த அடிப்படையில் முன்னேறி கொண்டு இருக்கும் அரசு என்றும், திராவிட மாடல் அரசு என்றும் மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என்று தெரியவில்லை என சாடினார்.

இலங்கையை போல் மாறி வரும் தமிழ்நாடு:

சமீபத்தில் இலங்கையில் இதே போன்று நிலைதான் ஏற்பட்டது, இங்கு நடப்பது போலவே, ஆட்சியை ஒரே குடும்பத்தின் கையில் கொடுத்துவிட்டதால், நிதி நிலைமை திவாலாகி அவர்கள் அனைவரும் இலங்கையை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. தற்போது 
தமிழகமும் ஒரு குட்டி இலங்கை போல் மாறி வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். 

திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை:

திமுக அரசை தொடர்ந்து குற்றம் சாட்டிய அவர், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் சமரசம் செய்து கொள்வதற்கோ அல்லது கூட்டணி வைத்துக் கொள்வதற்கோ ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி திமுகவுக்கு இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.