49வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற யு.யு.லலித்...ஆனால் 74 நாட்கள் மட்டும் தானா..?

49வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற யு.யு.லலித்...ஆனால் 74 நாட்கள் மட்டும் தானா..?

உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக, யு.யு.லலித் பதவி ஏற்றுக்கொண்டார். 

என்.வி.ரமணா ஓய்வு:

உச்ச நீதிமன்றத்தின் 48 வது தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா, நேற்றுடன் ஒய்வு பெற்றார். இறுதியாக அவர், தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளுக்கு தடைக்கோரி தொடர்ந்த பொதுநல வழக்கை, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து, அடுத்து எந்த அமர்வு என்பதை அடுத்த தலைமை நீதிபதி முடிவு செய்வார் என உத்தரவிட்டார்.

பரிந்துரை:

முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் (யு.யு.லலித்) பெயரை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைத்துறைத்தார்.

பிரிவு உபச்சார விழா:

இந்நிலையில், முன்னாள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நேற்று பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அபோது பேசிய யு.யு.லலித், "என்.வி.ரமணா தனது பதவிக்காலத்தில் பல்வேறு புரட்சிகளை செய்துள்ளார். அவரது செயல்பாட்டை ஈடு செய்வது அவ்வளவு எளிதல்ல. அவர் விட்டுச் சென்ற புரட்சியால் அடுத்து அப்பதவிக்கும் வரும் என் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உச்ச நீதிமன்றம் செயல்படும் நேரத்தை சற்று முன் கூட்டியே மாற்றி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதுபோல் நீதி விசாரணைக்காக வழக்குகளை பட்டியலிடுவதில் வழக்கின் தன்மைக்கு ஏற்ப முன்னுரிமை அளித்தல், அவற்றை வெளிப்படைத்தன்மையை அமல்படுத்த விரும்புகிறேன். அதேபோல் உச்ச நீதிமன்றத்தில் ஆண்டு முழுவதும் ஒரு அரசியல் சாசன அமர்வு செயல்படும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்படும்" என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/One-word-Action-is-different-failed-judiciary-under-Ramana

இன்று பதவியேற்பு:

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வு பெற்றதை அடுத்து, 49 வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று காலை பதவியேற்றார். அத்துடன் அவருக்கு  குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தனது மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில், பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் பிற துறைகளின் மத்திய அமைச்சர்களும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொண்டனர். 

74 நாட்கள் மட்டுமே பதவி:

உச்ச நீதிமன்றத்தின் 49 வது தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யு.யு. லலித், 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வழக்கறிஞர் பிரிவில் இருந்து, நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். இவர் அடுத்து வரும் 74 நாட்கள் மட்டுமே  உச்சநீதிமன்ற நீதிபதியாக தனது கடமையாற்றுவார்.அத்துடன்  நவம்பர் 8ஆம் தேதியுடன் அவருக்கு 65வது வயது தொடங்குவதால் அன்றுடன் ஓய்வு பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.