எடப்பாடியை மறைமுகமாக மிரட்டுகிறாரா ஸ்டாலின்?

எடப்பாடியை மறைமுகமாக மிரட்டுகிறாரா ஸ்டாலின்?
Published on
Updated on
2 min read

ஜெயலலிதா மரணம் அறிக்கை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓபிஎஸ் கூறியதையடுத்து, அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி, அதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைத்தார். இந்த ஆணையம் கிட்டத்தட்ட 5 வருடங்களாக விசாரணை மேற்கொண்டு ஒரு வழியாக கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி 600 பக்கம் கொண்ட அறிக்கையை ஆறுமுகசாமி முதலமைச்சர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார். இது குறித்த விவரங்கள் அமைச்சரவைக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவைக்கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது என்ன:

இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தாக்கல் செய்த அறிக்கை விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, விசாரணை ஆணையத்தின் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா, சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் இராம மோகன் ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரைத்தது. இந்த விசாரணையை தொடர்ந்து, இது குறித்த அறிக்கையும், ஆணையத்தின் அறிக்கையையும் சட்டப்பேரவையில் வைக்க அமைச்சரவை உத்தரவிட்டிருந்தது. 

துப்பாக்கி சூடு சம்பவம் ஆலோசனை:

அதேபோல், தூத்துக்குடி துப்பாக்கிக் சூடு குறித்த செய்தியை டிவியை பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என்று ஈபிஎஸ் கூறியது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இது  குறித்த அறிக்கையும் சட்டசபையில் வைக்கப்படும் என்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

திருமண விழாவில் ஸ்டாலின்:

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முதலில் மணமக்களை வாழ்த்தி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம்; மீதமுள்ள 30 சதவீதத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரச்சனைகள்:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுகவினரே கூறினார்கள். அதன்படி, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓபிஎஸ் கூறியதால், அது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை பரிந்துரைத்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரையிலும், அந்த விசாரணையானது ஒரு ஒப்புக்காகவே நடைபெற்றதாக கூறினார். அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை முறையாக ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறினோம்.  அதேபோன்று, கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை குறித்து ஆலோசித்தோம். அதில் பல பிரச்சனைகள் இருப்பதாகவும் கூறினார். ஆனால், அதை எல்லாம் இப்போ சொல்லமாட்டேன்; அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்து, அதன்பின் தெரிவிப்போம் என்று கூறினார்.

தூத்துக்குடி விவகாரம் அறிக்கையும் விவாதிக்கப்படும்:

அதேபோன்று, கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த செய்தியை டிவியை பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கூறினார். அது குறித்த அறிக்கையும் சட்ட சபையில் வைக்கப்படும் என விழாவில் ஸ்டாலின் பேசியுள்ளார். 

சந்தேகம்:

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரணை ஆணையத்தை ஒப்புக்கு வைத்ததாகவும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈபிஎஸ்ஸின் பொறுப்பற்ற பேச்சையும் சுட்டிக்காட்டி திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். இதனால் மறைமுகமாக ஈபிஎஸ்ஸை ஸ்டாலின் மிரட்டுகிறாரா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் வட்டமடித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com