என்னது...ஓபிஎஸ் அணியில் இணைகிறேனா? கொந்தளித்த பிரபலம்...!

என்னது...ஓபிஎஸ் அணியில் இணைகிறேனா? கொந்தளித்த பிரபலம்...!

தர்மயுத்த நாடகத்தையே தள்ளி நின்னு வேடிக்கைப் பார்த்தவ நான், இந்த அதர்ம யுத்த நாடகத்துக்கு கண்டிப்பா ஆதரவு தரமாட்டேன் என அதிமுகவைச் சேர்ந்த நடிகை ஒருவர் விமர்சித்துள்ளார்...

அதிமுக உட்கட்சி விவகாரம்:

அதிமுகவில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதியன்று எழுந்த ஒற்றைத்தலைமை கோஷத்தால் அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டது. அதுவரை இரட்டை துப்பாக்கிகளாக இருந்த ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஜூன் 14 ஆம் தேதியுடன் எதிரெதிரே மோதி கொண்டனர். 

வெற்றி பெற்ற ஓபிஎஸ்:

ஒற்றைத்தலைமை விவகாரத்தில் தனக்கு எதிராக கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு தடைக்கோரி நீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ்க்கு உயர்நீதிமன்றத்தில் சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார் ஈபிஎஸ். அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்க போகும் தீர்ப்பை பொறுத்தே நிரந்தர வெற்றி யாருக்கு என்பது தெரியவரும்.

ஆதரவை திரட்டும் ஓபிஎஸ்:

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து செய்தியாளர்கள் முன்பு பேசிய ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு அழைப்பு விடுத்தார். ஆனால், எடப்பாடி ஓபிஎஸ்ஸின் அழைப்பை நிராகரித்துவிட்டார். இதனையடுத்து அதிமுகவை கைப்பற்றுவது குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஓபிஎஸ் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதில் முதற்கட்டமாக, எடப்பாடி தரப்பில் இருக்கும் ஆதரவாளர்களை தன் பக்கம் வரவழைப்பதற்காக பல்வேறு யூகங்களை கையாண்டு வருகிறார். 

இதையும் படிக்க: எடப்பாடியை மறைமுகமாக மிரட்டுகிறாரா ஸ்டாலின்?

தன் அணியை விட்டு பேசவைப்பது:

எடப்பாடி தரப்பில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள் என ஆதரவாளர்கள் அனைவரிடமும் ஓபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்மூலம், ஈபிஎஸ் பக்கம் இருக்கும் ஆதரவாளர்கள் சிலர் ஓபிஎஸ் பக்கம் தாவி வருகின்றனர். தொடர்ந்து, இன்னும் பலருடன் ஓபிஎஸ் டீம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நடிகையுடன் பேச்சுவார்த்தை:

எடப்பாடி தரப்பில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள் மட்டுமல்லாமல், பிரபல நடிகர்களையும் தன் பக்கம் சேர்த்துவிட்டார். அந்த வகையில், அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியாவிடம் ஓபிஎஸ்ஸின் டீம் பேச்சு வார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியானது. ஆனால், விந்தியா எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் என்பதால், இவரும் ஓபிஎஸ் பக்கம் சாய்வாரா? என்ற கேள்விகள் எழுந்தது.

கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை:

நடிகை விந்தியா ஓபிஎஸ் பக்கம் சாய்வாரா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”தர்மயுத்த நாடகத்தையே தள்ளி நின்னு வேடிக்கைப் பார்த்தவ நான், இந்த அதர்ம யுத்த நாடகத்துக்கு கண்டிப்பா ஆதரவு தரமாட்டேன்...கருணாநிதிக்கு பாராட்டு பத்திரம் வாசிச்சவரை உண்மையான அதிமுக தொண்டர்கள் தலைவரா இல்லை...மனுஷனா கூட ஏத்துக்க மாட்டாங்க” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் மூலம் அவர் ஓபிஎஸ் அணியில் சாய்வாரா? என்னும் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.