இந்தியாவிலேயே முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல்... காரணம் என்ன?!!

இந்தியாவிலேயே முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல்... காரணம் என்ன?!!

150 வருடங்கள் பழமையான டாக்டர்.எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ரயில் நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்றிலும் அமைதியாக மாறியது.  இந்தியாவில் முதல் முறையாக ஒரு புது விதமான அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதையொட்டி மிகவும் அமைதியாக காட்சியளித்தது சென்னை சென்ட்ரல்.

இனி ரயில் நிலையத்தில் ஒலிக்கும் ஈரோட்டை சேர்ந்த டப்பிங் கலைஞரும் கல்லூரி விரிவுரையாளருமான கவிதா முருகேசனின் குரலை கேட்க முடியுமா என்ற கேள்வி இதனிடையே எழுந்துள்ளது.  டாக்டர்.எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ரயில் நிலையம் தினசரி 200க்கும் மேற்பட்ட ரயில்களை கையாண்டு வருகிறது.  தினமும் சராசரியாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.

இங்கு ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம் உள்ளிட்ட பல தகவல்களை அறிவிக்க பொது அறிவிப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது.  இது பார்வைதிறன் சவாலுடையோருக்கு மிகவும் பயனுள்ளதாகவும் பயணிகளுக்கு எளிதானதாகவும் இருந்த நிலையில் தற்போது அதை நீக்கும் ”அமைதியான ரயில் நிலையம்” திட்டத்தின் முன்னோட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. 

திட்ட முன்னோட்டத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சென்னை சென்ட்ரல் நிலையமானது எந்த அறிவிப்புமின்றி அமைதியாக இருந்தது.  ரயில் நிலையத்தின் பல இடங்களிலும் எல்இடி தகவல் பலகைகள் பயன்படுத்தப்பட்டன.  பயணிகள் இந்த தகவல் பலகைகள் மூலம் மட்டுமே தகவலை பெற முடிந்தது.  பார்வை சவாலுடையோர் பயன்படுத்தும் விதமாக க்யூஆர் கோடு வசதியும் செய்யப்பட்டிருந்தது.

அமைதியான ரயில் திட்டத்தைக் குறித்த மக்கள் கருத்து வேறுபட்டு காணப்படுகிறது.  சில மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள அதே வேளையில் பெரும்பான்மையான மக்கள் தங்களது அதிருப்தியையே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் மாற்று திறனாளிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்ற கருத்தும் மக்களிடையே காணப்படுகிறது.

மத்திய அரசு திட்ட முன்னோட்டத்தை நடைமுறைப்படுத்திய பிறகு இதற்கான நிறை குறைகளை ஆராய்ந்து செயல்படுத்த முடியுமா என்ற நிலைப்பாட்டை எடுக்கும் என தகவலகள் தெரிவிக்கின்றன.  சாதகமாக இருப்பின் அனைத்து ரயில் நிலையங்களிலும் இது விரைவில் செயல்படுத்தப்படும்.  அதன் பிறகு ரயில் நிலையத்தில் ஒலிக்கும் “டிங்..டிங்..பயணிகளின் கனிவான கவனத்திற்கு...” என்ற ஒலியை ஒருபோதும் கேட்க இயலாது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com