கொடநாடு வழக்கில் விசாரணை...திமுகவில் இணைய முடிவு...அதிமுக நிர்வாகி கொடுத்த ஷாக்!
அதிமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.சி.ஆறுகுட்டி, பொள்ளாச்சியில் நடைபெறும் திமுக பொது கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வி.சி.ஆறுகுட்டி:
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து இருமுறை வென்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் வி.சி.ஆறுகுட்டி. கோவை மாவட்ட அதிமுகவில் முக்கிய நபராக பார்க்கப்படும் இவர், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார்.
ஓ.பி.எஸ் - ஈபிஎஸ்க்கு எதிராக கருத்து:
கட்சியின் செயல்பாடுகளில் சிறிது காலம் ஒதுங்கிருந்த ஆறுகுட்டி, கடந்த ஓராண்டாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். தொடர்ந்து, ஓபிஎஸ் - இபிஎஸ் செயல்பாடு குறித்து கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்வது சரியல்ல. இவர்கள் இருவருக்கும் பதிலாக வேறு யாராவது அதிமுக பொதுச்செயலாளராக வந்தால் நன்றாக இருக்கும். அதிமுகவை சாதிக்கட்சி போல் மாற்ற வேண்டாம்” என்று கருத்து கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
கொடநாடு வழக்கில் விசாரணை:
இதற்கிடையில்,கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வி.சி.ஆறுகுட்டி மற்றும் அவரது மகனிடம் மூன்று முறை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
திமுகவில் இணைவு:
இந்த நிலையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து பேசிய ஆறுகுட்டி, தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும், இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆறுகுட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் அதுவும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை அவர் திமுகவில் இணைய உள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
ஆறுகுட்டி கருத்து:
திமுகவில் இணைவது குறித்து கூறிய வி.சி.ஆறுகுட்டி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிமுகவில் தன்னை புறக்கணித்து வருவதாகவும், அதன் காரணமாகவே திமுகவில் இணைவதாகவும் தெரிவித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து, அவரது மகளும் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினருமான அபிநயா மற்றும் மகன் அசோக் உள்ளிட்டோரும் இணைகின்றனர்.
சந்தேகம்:
முன்னதாக, கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் காவல் துறையினர் வி.சி.ஆறுகுட்டி மற்றும் அவரது மகனிடம் மூன்று முறை விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை அடுத்து, எங்கே இந்த வழக்கில் காவல்துறை தங்களை சேர்த்து விடுவார்களோ? என்ற பயத்திலேயே ஆறுகுட்டி திமுகவில் இணையும் முடிவை எடுத்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளது.