இலவசங்களும், வரலாறும்..! இது வரை தமிழக அரசின் இலவசங்கள்..! 

இலவசங்களும், வரலாறும்..! இது வரை தமிழக அரசின் இலவசங்கள்..! 
Published on
Updated on
2 min read

இந்தியாவில் பல மாநிலங்களில் இலவசங்கள் தான் தேர்தல் வெற்றிக்கு காரணமாக உள்ளது. சில கட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெரும் நோக்கில், குறுக்கு வழியாக இலவசங்கள் வழங்குவதைத் தேர்ந்தெடுக்கின்றனர். இலவசங்கள் கொடுப்பதால் மட்டும் அது நல்லாட்சி ஆகி விடாது என, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பேசியிருந்தார். மேலும், இலவச திட்டங்களால் அதிக செலவாகிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது.

இன்றைய நாளில் அரசு தரும் இலவசங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இது வரை அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள் குறித்து ஒரு பார்வை.

முன்னோடி தமிழகம்:

இந்தியாவில் பல மாநிலங்களில் இலவசங்கள் அறிவிக்கப்பட்டாலும், தமிழகத்தில் அதிக அளவிலான இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றது என்பது விவாதத்திற்கு உள்ளன ஒன்றான உள்ளது. 
தமிழக அரசால் வழங்கப்படும் இலவசங்களுக்கு முன்னோடியாக பார்க்கப்படுவது 1967 சட்டமன்றத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா வெளியிட்ட, "படி அரிசி திட்டம்" தான்.

வெற்றி பெற வைத்த வாக்குறுதி:

தமிழ்நாட்டில் அரிசிப் பஞ்சம் நிலவிய அந்த காலத்தில்  "திமுக ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி லட்சியம், ஒரு படி அரிசி நிச்சயம்" என தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார் அண்ணா. இந்த அறிவிப்பால் கவரப்பட்டு, மக்கள்அவருக்கு வாக்களித்தனர். தனக்கு வாக்களித்த மக்களுக்கு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றி வைத்தார் அண்ணா.

தொடரும் இலவசங்கள்:

அன்று முதல் இன்று வரை தேர்தல் காலங்களில் இந்த இலவச வாக்குறுதிகள் நீண்டு வருகின்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, ரேஷன் கடைகளில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி உள்ளிட்ட வாக்குறுதியை அளித்தார் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி. அந்த அறிக்கை தான் அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

திமுக vs அதிமுக:

2011 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என திமுக, அதிமுக இருவரும் மாறி மாறி இலவசங்களை அறிவித்தனர். கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி என திமுக அறிவிக்க, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கே இலவச மடிக்கணினி என அதிமுக அறிவித்தது. 

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசம் என்ற அறிவிப்பை திமுக வெளியிட, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி இலவசம் என்றது அதிமுக. 

நீளும் இலவசங்கள்:

அந்த வரிசையில், இலவச மிக்சி, இலவச கிரைண்டர் என திமுக அறிவிக்க , அதன் உடன் மின் விசிறியும் இலவசம் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றது அதிமுக. மேலும், 2016 இல் தாலிக்கு தங்கம், பெண்களுக்கு பல இலவசங்கள் என அறிவித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது அதிமுக. 

தமிழக கட்சிகளின் இலவசங்கள்:

இலவசக் கல்வி, இலவச வேஷ்டி சேலை, காலணிகள், புத்தகப்பை, சீருடை, இலவச பயணசலுகை, முதியோர் உதவித் திட்டம், விதவைகள் மறுவாழ்வுத் திட்டம், சத்துணவுத் திட்டம், இலவச தொலைக்காட்சி, அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் 20 கிலோ அரிசி, லேப்டாப், மிதிவண்டி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, 100 யூனிட் மின்சாரம், தாலிக்கு தங்கம், 50 % மானியத்தில் பெண்களுக்கு இரு சக்கர வாகனம், குடும்ப பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் நிதி, வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 5 வயதுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு இலவச பேருந்து பயணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு, நகைக்கடன் தள்ளுபடி, இலவச நாட்டுக்கோழி திட்டம், இலவச ஆடு, மாடு திட்டம்.

ஆறரை லட்சம் கோடி கடன்:

இலவச மிதிவண்டி, மாணவர்களுக்கு லேப்டாப், இலவச சத்துணவு, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை என பயனளிக்க கூடிய இலவசங்கள் இருந்தாலும், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இலவச மிக்சி, இலவச கிரைண்டர் என தேர்வை இல்லாத இலவசங்கள் தமிழக அரசின் கடனை அதிக படுத்தியதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றது. 

கட்டுப்பாடு அவசியம்:

அரசியல் கட்சிகள் கூறும் அனைத்து இலவசங்களையும் தடுக்க முடியாது என்றாலும், கட்டுப்படுத்துவது எனபது அவசியமான ஒன்றாகியுள்ளதாக கூறியுள்ளார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. நாடு பொருளாதார சிக்கலை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது எனக் கூறப்பட்டுவரும் நிலையில், பதவிக்காக இலவசங்கள் அறிவிக்கக்கூடாது என்பதும் பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com