2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500 ரூபாய் ,1000 ரூபாய்நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை அடுத்தாற் போல் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் மத்திய அரசால் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நாட்டின் பொதுமக்களுக்கு அறிவித்தது. அதில் அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என்றும், அந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2000, 500, 100 ரூபாய்நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு விரைவாக புதிய நோட்டுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டது. புழக்கத்தில் இருக்கும் 68 லட்சம் கோடி ரூபாய்க்கு மாற்று பணம் வழங்க வேண்டும் என்பதற்காக அதிக அளவு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. குறைந்த காலத்தில் அதிக பணம் அச்சிட வேண்டும் என்ற நோக்கில் அவ்வாறு அதிக அளவு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. இதன் காரணமாக 2017-ம் ஆண்டு 354.29 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் நாட்டில் புழக்கத்தில் இருந்தன.
2017-18 நிதியாண்டில் 11.15 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டது. 2018-19 நிதியாண்டில் அதுவும் குறைந்து 4.65 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டன. அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு முதல் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவதை ரிசர்வ் வங்கி முற்றிலும் நிறுத்திவிட்டது. தற்போது செப்டம்பர் 30-க்குப் பிறகு, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிடும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுபோன்று அடிக்கடி செயல்படுத்தப்படும் பணமதிப்பழப்பு நடவடிக்கையால் நாட்டிற்கு என்ன பயன்? இதனால் கருப்பு பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதா என்ற கேள்விகள் சர்வசாதாரணமாக சாமானிய மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கான விளக்கத்தை தருகிறார் பொருளாதார ஆலோசகர் வெங்கடேஷ் ஆத்ரேயா,
பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் கள்ளநோட்டு ஒழிக்கப்படும் , தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்றும், இந்தியாவில் கருப்பு பணம் என்பதே இருக்காது, வரி ஏய்ப்பு குறைக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது என்ன நடந்தது?
நாட்டின் வளர்ச்சி கடந்த 2017 ஜூன் மாதத்தின் போது 5.6 சதவீதமாக குறைந்தது. 10 லட்சத்திற்கும் அதிகமான தினக்கூலிகள் வேலை இழந்தனர்.
மார்ச் 2017 வரையில் தனி நபர் வருமான வரி 11 சதவீததிலிருந்து 27 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. 62 லட்சமாக இருந்த வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியதாக மத்திய அரசு தெரிவித்ததுள்ளது.
சட்ட விரோதமான முறையில் அரசுக்கு கணக்கு காட்டாத வகையில் சேமிக்கப்படும் கருப்பு பணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரிய அளவில் ஒழிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பெரிய அளவில் கள்ள நோட்டுகள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை.
எனக் கூறியுள்ளார். இப்படி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்மறையாக தகவல்கள் வெளியாகினாலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாயை திரும்ப பெறும் அறிவிப்பும் எந்த நன்மையும் விளைவிக்காது என்பதே அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....!!!