சிம்-பாக்ஸ்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மோசடி...! இருவர் கைது...!

சென்னையில் சிம்-பாக்ஸ்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தொடர்புகொண்டு மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் படிக்கலாம்.

சிம்-பாக்ஸ்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மோசடி...! இருவர் கைது...!

புகாரளித்த இளநிலை தொலைதொடர்பு அதிகாரி :

சென்னையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இளநிலை தொலைதொடர்பு அதிகாரி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், தொலை தொடர்புத்துறை சந்தேகத்தின் அடிப்படையில் விநியோகிக்கப்பட்ட 150 சிம் கார்டு எண்களை ஆராய்ந்தபோது கடந்த அக்டோபர் மாதம் முதல் சட்டத்திற்கு புறம்பான டெலிகாம் எக்ஸ்சேஞ்சுகள் அமைந்தகரை பகுதியில் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த டெலிகாம் எக்ஸ்சேஞ்சுகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

விரைந்த சோதனை :

அப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம், இந்திய தந்திச் சட்டம் மற்றும் தொழிற்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அமைந்தகரை எம்.எம் காலனி ஏ-பிளாக் மற்றும் பி.பி தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர்.அப்போது 4 சிம்-பாக்ஸ்கள், 130 சிம்-கார்டுகள், 2 மோடம், 1 லேப்-டாப் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் சிக்கிய நபர் : 

பின்னர் சம்மந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளரிடம் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக சென்னை அமைந்தகரையில் தங்கி பணியாற்றி வரும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (19) என்பவர் அந்த வீடுகளை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது. 

கிடுக்குபிடி விசாரணையில் தெரியவந்த உண்மைகள் :

அதனடிப்படையில் வீட்டு உரிமையாளர் மூலமே சைபர் கிரைம் போலீசார் ஜாகீர் உசேனை செல்போனில் தொடர்புகொண்டு வரவழைத்து பிடித்து அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜாகீர் உசேன் அளித்த தகவலின் அடிப்படையில் பெரியமேடு பகுதியில் தங்கியிருந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சல்மான் ஷெரிஃப் (29) என்பவரையும் சைபர் கிரைம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவ்விருவரையும் சென்னை காவல் ஆணையரகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  

சிம்-பாக்ஸ் மோசடி :

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சல்மான் ஷெரிஃப் சிம்-பாக்ஸ் மோசடிக்கு மூளையாக செயல்பட்டு வந்ததும், இதேபோன்று வேலூரில் டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் வைத்து நடத்திய வழக்கிலும் சல்மான் ஷெரிஃப் சம்மந்தப்பட்டு தலைமறைவானதும் தெரியவந்தது. மேலும் அந்த் அவழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற சல்மான் ஷெரிஃப், பணம் சம்பாதிக்கும் முனைப்பில் ஆன்லைன் மூலம் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை தொடர்புகொண்டு கொரியர் சர்வீஸ் மூலம் 4 சிம்-பாக்ஸ்கள் மற்றும் 130 சிம்-கார்டுகளைப் பெற்றதும் தெரியவந்தது. 

அரசுக்கு வருவாய் இழப்பு :

அதன் தொடர்ச்சியாக ஜாகீர் உசேன் மூலம் அமைந்தகரை பகுதியில் வீடுகள் வாடகைக்கு எடுத்து டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் செட்டப்பை உருவாக்கியதும், அதன் மூலம் வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது. 

பங்களாதேஷ் நாட்டில் உள்ளவரிடம் தொடர்பு : 

அதுமட்டுமல்லாமல் ஜாகீர் உசேன் மற்றும் சல்மான் ஷெரிஃப் ஆகியோர் பங்களாதேஷ் நாட்டிற்கு ஆன்லைனில் தொடர்புகொண்டு அங்குள்ள மஹ்மூத் என்ற நபரிடம் இருந்து டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் செட்டப் வைக்க 35 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று, டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் செட்டப்பை உருவாக்கியதும், அதை மஹ்மூத் பங்களாதேஷில் இருந்து க்லௌடு மூலம் ஆன்லைனில் மேற்பார்வை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சிறை தண்டனை :

அந்த விசாரணையின் அடிப்படையில் சிம்-பாக்ஸ்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக டெலிக்காம் எக்ஸ்சேஞ்ச் வைத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய ஜாகீர் உசேன் மற்றும் சல்மான் ஷெரிஃப் ஆகிய இருவர் மீதும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவ்விருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க : கோகுல்ராஜ் கொலை வழக்கு...! சுவாதியை ஆஜர்படுத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..!