கொடிகட்டி பறக்கும் கள்ளச்சாராய விற்பனை... முற்றிலும் ஒழிக்க கோரிக்கை!!

கொடிகட்டி பறக்கும் கள்ளச்சாராய விற்பனை... முற்றிலும் ஒழிக்க கோரிக்கை!!
Published on
Updated on
1 min read

கடந்த 13ஆம் தேதி விழுப்புரத்தில் விஷ சாராயம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள மதுபானம்  அருந்தி 14பேர் உயிரிந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மீனவக் கிராமமான எக்கியார் குப்பத்தில், கடந்த 13ஆம் தேதி விஷ சாராயம் அருந்திய 70-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  விஷ சாராயம் அருந்தியவர்களில், சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் பூரணமாக குணமடைந்து, வீடு திரும்பிய நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 5 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

விஷ சாராய வழக்கில், இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.  இந்த உயிரிழந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் குறையாத நிலையில், விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்தில் பட்டப் பகலில், பல பேர் முன்னிலையில் போதை ஆசாமிகள் இருவர், கள்ளச் சாராயம் குடித்துள்ளனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் கள்ளச் சாராயத்தை தடுக்க காவல்துறை என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், விழுப்புரத்தில் கள்ளச்சாராய விற்பனை கொடிக்கட்டி பறப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  தற்போது விழுப்புரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்காய், விழிப்புடன் செயல்பட்டு, கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் ஒழித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com