4ம் நாள் உற்சவத்தில் நாக வாகனத்தில் தரிசனம் கொடுத்த ஏகாம்பரநாதர்...

4ம் நாள் காலை உற்சவத்தில் சிவகாஞ்சியில் இருந்து ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி அம்மன் நாக வாகனத்தில் எழுந்தருளினார்கள்.
4ம் நாள் உற்சவத்தில் நாக வாகனத்தில் தரிசனம் கொடுத்த ஏகாம்பரநாதர்...

காஞ்சிபுரம் | பஞ்ச பூத ஸ்தலங்களில் பிருத்வி எனும் மண் (பூமி) ஸ்தலமாக விளங்கும் 3000 ஆண்டுகள் பழமையான, உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் நாள்தோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

4-வது நாள் காலை உற்சவத்தை முன்னிட்டு ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்மனுக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மல்லிகைபூ, சம்பங்கிபூ மனோரஞ்சிதம்பூ மலர்மாலைகள் சூட்டி, திருவாபரணங்கள் அணிவித்து நாக வாகனத்தில் ஏகாம்பரநாதரும், எழுந்தருள செய்து நான்கு ராஜ வீதி வழியாக மேளதாளங்கள், சிவவாத்தியங்கள் முழங்க, திருவீதி உலாவாக சென்றனர். 

திருவீதி உலா உற்சவத்தில் விநாயகர், சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் சண்டிகேஸ்வரரும் பின் தொடர்ந்து செல்ல ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருவீதி உலா வந்தனர்.

திருவிழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழி நெடிகளும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். ஆகமவிதிப்படி 4ம் நாள் முதல், சோமாஸ்கந்தர் சிலையில் உள்ள அம்மன் தெரிவது போல் மாலை அணிவித்து திருவீதி உலா நடைபெறுகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com