புறம்போக்கு நிலத்தில் கோவில் கட்டிடம்; இடிக்கச் சென்றதால் பரபரப்பு!

புறம்போக்கு நிலத்தில் கோவில் கட்டிடம்; இடிக்கச் சென்றதால் பரபரப்பு!

வேடசந்தூர் அருகே நீர்வழிப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கோவிலை வருவாய்த்துறையினர் இடிக்க சென்ற போது பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே குரும்பப்பட்டியில் நீர்வழிப்பாதை மற்றும் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து ஒரு தரப்பினர் வலம்புரி வெற்றி விநாயகர் கோவில் கட்டி உள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கோவிலை இடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று கோவிலை இடிக்க வந்தனர்.

இதற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் கோவிலுக்குள் சென்று அமர்ந்து பூட்டு போட்டு கொண்டு கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பெண் ஒருவருக்கு அருள் வந்தாக கூறி, "சாமி ஆடியபடி, நான் தெய்வம் டா. கோவிலை இடிக்க கேஸ் போட்டவரை போட்டு தள்ளி விடுவேன்" என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்ற நபர் பெட்ரோல் கேன் உடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் அவரிடம் பெட்ரோல் கேனை பறித்து அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து இடத்தை அளக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

இதையும் படிக்க:இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மகுடம் சூடிய தமிழர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் வீரமுத்துவேல்...!