முதலமைச்சர் தங்க கோப்பை போட்டிக்கு நிதி.. ஆந்திரா செல்லும் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர்..!

முதலமைச்சர் தங்க கோப்பை போட்டிக்கு நிதி.. ஆந்திரா செல்லும் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர்..!

உதயநிதி உரையாடல் 

ஆந்திரா மாநிலத்தில் நடைபெறவுள்ள 3வது தேசிய அளவிலான ஏகலைவா உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்கவுள்ள மாணவர்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் உரையாடினார்.

நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜவஹர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஷ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இருளர் - பழங்குடியினர் பள்ளி

இருளர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சார்ந்த மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என ஏகலைவா உண்டி உறைவிடப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த அக்டோபர் மாதம் சேலத்தில் நடைபெற்றது. அந்த போட்டிகள் 520 மாணவர்கள் பங்கேற்ற நிலையில் அதில் வெற்றி பெற்ற 210 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மேலைகோட்டையூர் விளையாட்டு பல்கலைகழகத்தில் கடந்த ஒரு மாதமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் வாழ்த்து

தற்போது 177 மாணவர்கள் தமிழ்நாடு சார்பில் ஆந்திராவில் நடைபெறும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஆந்திராவுக்கு புறப்படயிருந்த விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி. ஆந்திரா மாநிலம் குண்டுரில் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது, இதில் 25 மாநிலங்களை சார்ந்த 4,336 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

அமைச்சர் உதயநிதி பேட்டி

விளையாட்டு வீரர்களுடன் உரையாடிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனைவரும் ஆரோக்கியமான விமர்சனங்களை முன் வைக்க வேண்டும். முதலமைச்சர் முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார், மூத்த அமைச்சர்கள் வழிகாட்டுதலின் படி சிறப்பாக செயல்படுவேன். தமிழ்நாட்டில் தேசிய விளையாட்டுகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் பீச் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க | உதயநிதி நடிக்க கூடாதா?...இனி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடக்கூடாது...நடிகர் விஷால் அதிரடி!

மாற்று திறனாளி வீரர்களுக்கு முன்னுரிமை

முதலமைச்சர் தங்க கோப்பை போட்டி நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஜனவரி மாதத்தில் போட்டிகள் தொடங்கப்பட இருக்கிறது. மாற்று திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். சிறப்பு திட்ட செயலாக்க துறையின் மூலம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.